தேனிலவின்போதே கருத்து வேறுபாடு: மனைவி உயிரை மாய்த்துக்கொண்டதால் கணவன் எடுத்த முடிவு
இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்ட நிலையில், அவரது வீட்டார் அந்தப் பெண்ணின் கணவன் குடும்பத்துக்கு கொடுத்த அழுத்தம் தாங்காமல், அவரும் தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
தேனிலவின்போது கருத்து வேறுபாடு...
அக்டோபர் மாதம் 29ஆம் திகதி திருமணம் செய்துகொண்ட பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதியர் இலங்கைக்கு தேனிலவுக்காக சென்ற நிலையில், அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்படவே, தேனிலவுத் திட்டங்களை திடுதிப்பென முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்கள் இருவரும்.
அதைத் தொடர்ந்து, தங்கள் மகளை அவளது கணவன் வீட்டில் மோசமாக நடத்துவதாகக் கூறி, அவரை அவரது தாய் வீட்டுக்கே அழைத்துக்கொண்டுள்ளார்கள் அவரது உறவினர்கள்.
இந்நிலையில், கடந்த வாரம், அந்தப் பெண் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார்.
அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறி அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தியுள்ளார்கள் மருத்துவர்கள்.
ஆனால், வியாழக்கிழமையன்று அவர் உயிரிழந்துவிட்டார். அதைத் தொடர்ந்து அவரது கணவன் வீட்டின் முன் கூடி ஆர்ப்பாட்டம் செய்ததுடன் அவருடைய குடும்பத்தினர் மீது பொலிசில் புகாரும் செய்துள்ளனர் பெண் வீட்டார்.
அவர்கள் கொடுத்த அழுத்தம் தாளாமல், அந்தப் பெண்ணின் கணவரும், அவரது தாய் மற்றும் சகோதரரும் பெங்களூருவை விட்டு வெளியேறி நாக்பூருக்குச் சென்றுள்ளார்கள்.
அவர்கள் நாக்பூரில் ஒரு ஹொட்டலில் தங்கியிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அந்த கணவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டுள்ளார். அவரது தாயும் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரு குடும்பங்களில் துயரத்தை உருவாக்கியுள்ள இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |