வாட்ஸ்அப் லொட்டரி மோசடியில் ரூ.1.9 லட்சத்தை இழந்த பெங்களூரு நபர்
Bengaluru Man Loses Rs.1.9 Lakh in WhatsApp Lottery Scam: வாட்ஸ்அப் லொட்டரி மோசடியில் பெங்களூரு நபர் ரூ.1.9 லட்சத்தை இழந்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த 33 வயதான தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், வாட்ஸ்அப் மூலம் நடத்தப்பட்ட போலி லொட்டரி மோசடியில் சிக்கி ரூ.1.9 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாட்ஸ்அப்பில் வந்த லொட்டரி வாய்ப்பு
பொலிசில் அளிக்கப்பட்ட புகாரின்படி, பெங்களூருவின் பி. நாராயணபுரா பகுதியைச் சேர்ந்த நபருக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு லொட்டரி விற்பனை தொடர்பான தகவல் வந்துள்ளது.
அந்த நபர், வாட்ஸ்அப் வழியாக 3 "கேரளம் லொட்டரி" சீட்டுகளை வாங்கியதாக கூறப்படுகிறது.
ரூ.12 லட்சம் பரிசு வென்றதாக தகவல்
சில மணி நேரங்களுக்குப் பிறகு, மோசடி நபர் தொடர்புகொண்டு, வாங்கிய சீட்டுகளில் ஒன்று ரூ.12 லட்சம் பரிசு வென்றுள்ளது என்று தெரிவித்தார். மேலும், பரிசுத் தொகையை பெற வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் அடையாள ஆவணங்களின் நகல்களை அனுப்புமாறு கேட்டுள்ளார். இதை நம்பிய பாதிக்கப்பட்ட நபர், தேவையான தகவல்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.
பல்வேறு கட்டணங்கள் கேட்டு மோசடி
பின்னர், பரிசுத் தொகையை வழங்க பல்வேறு கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்று கூறி பணம் கோரப்பட்டுள்ளது. முதலில் "லொட்டரி அனுமதி கட்டணம்" என்ற பெயரில் ரூ.7,500, அதன் பிறகு RTGS பணப் பரிமாற்றக் கட்டணமாக ரூ.18,000, செயலாக்கக் கட்டணமாக ரூ.36,000 மற்றும் TDS, GST வரி செலுத்துவதற்காக ரூ.1.32 லட்சம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இரண்டு கணக்குகளுக்கு பணம் அனுப்பிய பாதிக்கப்பட்டவர்
மோசடி நபரின் பேச்சை நம்பிய அந்த நபர், டிஜிட்டல் கட்டண செயலி மூலம் ஒரு வங்கி கணக்கிற்கு ரூ.99,500 மற்றும் மற்றொரு கணக்கிற்கு ரூ.94,000 என மொத்தம் ரூ.1.93 லட்சம் அனுப்பியுள்ளார்.
மேலும் பணம் கேட்டபோது சந்தேகம்
பணம் அனுப்பிய பிறகும் பரிசுத் தொகை அவரது கணக்கில் வரவில்லை. அதுமட்டுமின்றி, மேலும் பணம் செலுத்துமாறு மோசடி நபர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பாதிக்கப்பட்டவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பொலிசில் புகார் அளித்தார்.
பொலிசார் எச்சரிக்கை
இந்த வழக்கை பெங்களூரு கிழக்கு சைபர் குற்றப்பிரிவு பொலிசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லொட்டரி, பரிசுத் தொகை மற்றும் முதலீட்டு லாபம் போன்ற பெயர்களில் சமூக ஊடகங்கள் அல்லது வாட்ஸ்அப் மூலம் வரும் தகவல்களை மக்கள் நம்பக்கூடாது என்றும், தெரியாத நபர்களுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்றும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.