வெளிநாட்டு பாணியில் காதல் முன்மொழிவு - காதலனை உயிருடன் எரித்த பெண்
வெளிநாட்டு பாணியில் காதல்முன்மொழிய போவதாக கூறி, காதலனை பெண் உயிருடன் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலனை உயிருடன் எரித்த பெண்
கர்நாடக மாநிலம், பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள அஞ்சனாபுரா பகுதியில் உள்ள செல்போன் கடை வேலை பார்த்து வந்தவர் 27 வயதான பிரேர்னா.
அதே கடையில் வேலை பார்க்கும் கிரண் என்பவருடன் ஒரு வருடமாக காதலில் இருந்து வந்துள்ளார்.

சமீபகாலமாக கிரண் தன்னை புறக்கணிப்பதாக கருதிய பிரேர்னா, நேற்று மதியம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிரணை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அப்போது கிரணை நாற்காலியில் அமர சொல்லி இறுக்கமாக கயிறால் கட்டியுள்ளார். கிரண் இது குறித்து கேள்வி எழுப்பிய போது, வெளிநாட்டு பாணியில் கண்ணை கட்டி காதலை முன்மொழிய போவதாக தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு கிரண் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், மண்ணெண்ணெயை அவர் மீது ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளார். கயிறால் கட்டப்பட்டிருந்ததால் கிரணால் தப்பிக்க முடியாமல் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
கிரண் உயிருடன் எரிவதை பிரேர்னா தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, "நான் கழிவறையில் இருந்தபோது ஒரு சத்தம் கேட்டது. வெளியே வந்தபோது, கிரண் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டிருந்தார்" என பிரேர்னா தெரிவித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கிரண் தன்னுடன் எந்த எரிபொருளையும் கொண்டு வரவில்லை என கண்டறிந்த காவல்துறையினர், பெட்ரோலை பிரேர்னா முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கலாம் என சந்தேகமடைந்தனர்.
இதனை தொடர்ந்து, பிரேர்னாவிடம் நடத்திய விசாரணையில் காதலன் தன்னை புறக்கணித்ததால் ஏற்பட்ட மனஅழுத்ததில் இவ்வாறு செய்ததாக பிரேர்னா குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |