கடைசி வாய்ப்பு... பெர்ன் மாநிலம் இளைஞர்களுக்கு அழைப்பு
பெர்ன் மாநில இளைஞர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுவிஸில் நாளுக்கு நாள் தடுப்பூசி பெற்றுக்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இதற்கு நேர்மாறாக 16-17 வயதுடையவர்கள் தடுப்பூசி பெற தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெர்ன் மாநிலத்தில் இதே வயதுடைய 20,000 இளைஞர்களில் இதுவரை வெறும் 6,000 பேர்கள் மட்டுமே தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர். அதில், 2,700 பேர்கள் மட்டுமே செவ்வாய்க்கிழமை வரையில் உறுதி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் பெர்ன் மாநில நிர்வாகம் வியாழக்கிழமை தங்களது சமூக ஊடக பக்கத்தில் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு இது கடைசி வாய்ப்பு. உடனடியாக தடுப்பூசிக்கு பதிவு செய்து கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
பெர்ன் நிர்வாகம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 16-17 வயதுடையவர்களுக்கான 6,000 சிறப்பு முன்பதிவுகளை ஒதுக்கியிருந்தது. அதனால் அவர்கள் சிக்கலின்றி தடுப்பூசி பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்த வாய்ப்பானது வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. இருப்பினும், பொதுமக்களுக்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு வாய்ப்புகளையும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றே நிர்வாகிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், கடந்த இரு நாட்களில் 16-17 வயதுடையவர்களில் வெறும் 100 பேர்கள் மட்டுமே மேலதிகமாக பதிவு செய்துள்ளனர்.