உலகின் நம்பர் 1 பணக்காரரான பிரெஞ்சு தொழிலதிபர்! ஜெஃப் பெஸோஸை பின்னுக்குத் தள்ளி முதலிடம்
உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட்.
இதுவரை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் இந்த இடத்தில் இருந்த நிலையில், அவரை பின்னுக்கு தள்ளி லூயிஸ் உய்ட்டன் மொய்ட் ஹென்னெஸி (Louis Vuitton Moet Hennessy) நிறுவன உரிமையாளர் Bernard Arnault முதலிடத்தை பிடித்துள்ளார்.
72 வயதாகும் பெர்னார்டுக்குச் சொந்தமான 70 பிராண்டுகள் உலகம் முழுவதும் பரவியுள்ளது.
ஃபோர்ப்ஸ் ரியல்-டைம் பில்லியனர்கள் பட்டியலின் படி, பிரெஞ்சு வணிக அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் 198.9 பில்லியன் டொலர் சொத்து மதிப்போடு உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தைப் பிடித்துள்ளார்.
இரண்டாம் இடத்தில் உள்ள அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் 194.9 பில்லியன் டொலர்களுக்கு அதிபதியாக உள்ளார்.
அதே நேரத்தில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் மூன்றாம் இடத்தில் உள்ளார், அவரது சொத்துக்களின் நிகர மதிப்பு 185.5 பில்லியன் டொலர்கள் ஆகும்.
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடும் ரியல் டைம் பட்டியலில், பணக்காரர்கள் தரவரிசைப் பட்டியல் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.