பிட்காயினில் முதலீடு செய்யச் சொன்ன காதலி: சுவிஸ் நபருக்கு நேர்ந்த மறக்க முடியாத சம்பவம்
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்தில் பிட்காயின் மோசடியில் சிக்கி இளைஞர் ஒருவர் பெருந்தொகையை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெர்ன் மாநிலத்தவரான 34 வயது தாரியோ என்பவர் இணையமூடாக தமக்கு ஒரு வாழ்க்கைத்துணையை தேடி வந்துள்ளார். இந்த நிலையில் தாரா என்பவரை தாரியோ சந்திக்க, இருவரும் மிக விரைவில் நெருங்கிய நண்பர்களானார்கள்.
மட்டுமின்றி அதே வேகத்தில் இருவரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்ளவும் செய்தனர். தாரா நிதி முதலீடுகளில் ஆர்வம் கொண்டவர். அவருக்கு பிட்காயின் உள்ளிட்ட Cryptocurrency வர்த்தகத்தில் ஈடுபாடு இருப்பதுடன் அதில் முதலீடுகள் குறித்து நல்ல ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில், தாரியோவை பிட்காயினில் முதலீடு செய்து கொள்ள தாரா தூண்டியுள்ளார். மட்டுமின்றி, தொடக்கத்தில் 500 பிராங்குகளுக்கு மட்டும் முதலீடு செய்தால் போதும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மட்டுமின்றி, பிட்காயின் முதலீட்டில் உதவும் பொருட்டு, தாரியோவின் கணினிக்கான கட்டுப்பாடுகளை தாராவுக்கு வழங்கியிருந்தார். நாளடைவில் தாரியோவின் பிட்காயின் முதலீடு நல்ல வருவாயை ஈட்டித்தரவே, மேலும் தொகையை முதலீடு செய்ய தாரா தாரியோவை கட்டாயப்படுத்தியுள்ளார்.
தாராவை நம்பிய தாரியோ அதிக முதலீடு செய்துள்ளதுடன், வருவாய் எதுவும் அவர் கைக்கு வரவில்லை என்றே கூறப்படுகிறது. இதனிடையே, தமது சேமிப்பு மொத்தமும் பிட்காயின் வாங்க செலவிட்ட தாரியோ, இதற்கு மேல் தம்மிடம் முதலீடு செய்ய பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரே, அந்த நடுங்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. தாரா என்பவர் தாரியோவை தொடர்புகொள்ள மறுத்ததுடன், அதுவரை முதலீடு தொடர்பில் தாம் கண்காணித்து வந்த இணைய பக்கமும் திடீரென்று மாயமாகியுள்ளது.
இதில் அதிர்ச்சியடைந்த தாரியோ, இணையத்தில் தேடியதில், தாரா என்பவரால் தாம் ஏமாற்றப்பட்டதும், தமது சேமிப்பு மொத்தமும் திருடிக்கொண்டது ஒரு நிறுவனம் எனவும் தாரியோ புரிந்து கொண்டார்.
தற்போது இந்த விவகாரத்தை பெர்ன் மாநில பொலிசார் விசாரித்து வருகின்றனர்.