சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்கள் வாழ சிறந்த நகரம் எது? மோசமான நகரம் எது?: ஆய்வு
வாழ்க்கைத்தரம் சம்பந்தமான சர்வதேச ஆய்வுகளில் வழக்கமாக சுவிட்சர்லாந்து நல்ல இடங்களைப் பிடிப்பதுண்டு. ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஒரே ஒரு சுவிஸ் நகரம் மட்டுமே முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது.
அது பேசல் நகரம்...
பேசல், 2021ஆம் ஆண்டுக்கான, வெளிநாட்டவர்கள் வாழ சிறந்த நகரங்கள் பட்டியலில், ஆய்வில் பங்கேற்ற 57 நகரங்களில், 9ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
InterNations என்ற அமைப்பு மேற்கொண்ட அந்த ஆய்வில், பணி நோக்கில் வரும் வெளிநாட்டவர்களுக்கு என்னென்ன பயன்களை நகரங்கள் அளிக்கின்றன என்பதன் அடிப்படையில், உலகிலுள்ள நகரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு தரவரிசைப்படுத்தப்பட்டன.
அந்த ஆய்வில் 12,420 பேர் பங்கேற்றார்கள். ஆய்வில், நகர வாழ்க்கைத்தரம், குடியமர்தல், பணிச்சூழல், நிதி மற்றும் வீட்டு வசதி, உள்ளூர் விலைவாசி முதலான விடயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த ஆய்வில் ஜெனீவா, சூரிச், பேசல் மற்றும் Lausanne ஆகிய நான்கு சுவிஸ் நகரங்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் பேசல் மட்டுமே அதிக புள்ளிகளைப் பெற்றது. அத்துடன், பேசல் மட்டுமே முதல் பத்து இடங்களுக்குள் வந்த மூன்று ஐரோப்பிய நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது.
அதற்கு என்ன காரணம்?
பேசல், அதன் மருந்தகத்துறை (pharmaceutical industry) காரணமாக, குறிப்பாக Roche, Novartis போன்ற மருந்தகத்துறை ஜாம்பவான்களின் அலுவலகங்கள் அங்கு அமைந்துள்ளதால், சர்வதேச பணியாளர்கள் பணியாற்றும் ஒரு இடமாக காணப்படுகிறது.
பொதுப்போக்குவரத்து வசதியில் முதலிடத்தையும், நகர வாழ்க்கைத்தரத்தில் இரண்டாவது இடத்தையும், பாதுகாப்பு மற்றும் அரசியலில் மூன்றாவது இடத்தையும் பேசல் பெற்றுள்ளது.
பேசலில் வாழும் அனைத்து வெளிநாட்டவர்களும் (100 சதவிகிதம்), பொதுப்போக்குவரத்து திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
கிட்டத்தல்ல ஆய்வில் பங்கேற்ற அனைவருமே (97 சதவிகிதம்) தாங்கள் பேசலில் பாதுகாப்பாக உணர்வதாக தெரிவித்துள்ளார்கள்.
ஐந்தில் நான்கு பேர் வரை (84 சதவிகிதம்), தங்கள் வருவாய் போதுமானதாக இருப்பதாகவும், 77 சதவிகிதத்தினர் தங்கள் நிதி நிலைமை திருப்திகரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவாவின் நிலைமை என்ன?
ஐக்கிய நாடுகள் ஏஜன்சிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பல இருப்பதால் சுவிட்சர்லாந்தின் அதிக அளவு ’சர்வதேசத்தன்மை’ கொண்ட நகரமாக கருதப்படும் ஜெனீவாவோ, கிட்டத்தட்ட பட்டியலின் அடிமட்டத்திற்கே சென்றுவிட்டது. ஆம், தரவரிசைப்பட்டியலில் 47ஆவது இடத்தில் உள்ளது ஜெனீவா!
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சுவிஸ் நகரங்களில் ஜெனீவா மோசமான முடிவுகளைப் பெற்றுள்ளது.
அரசியல் நிலைத்தன்மையில் முதலிடம் பிடித்துள்ள ஜெனீவா, மருத்துவ வசதி கிடைப்பதில் 56ஆவது இடத்தில் உள்ளது.
உள்ளூர் விலைவாசி முதல், நிதி மற்றும் வீட்டு வசதி வரை மோசமான புள்ளிகளைப் பெற்றுள்ளது ஜெனீவா.
நகர வாழ்க்கைத்தரத்தில் ஓரளவு நல்ல புள்ளிகளைப் (28ஆவது இடம்) பெற்றுள்ள ஜெனீவா, குடியமர மக்கள் காட்டும் விருப்பத்திலோ 43ஆவது இடத்தில் உள்ளது.
ஆய்வில் பங்கேற்ற மற்ற சுவிஸ் நகரங்களான சூரிச் மற்றும் Lausanne ஆகியவற்றின் நிலை
சூரிச் மற்றும் Lausanne ஆகிய நகரங்கள், மிகச் சிறந்தது மற்றும் மிக மோசமானது ஆகிய இடங்களுக்கு நடுவில் இடம் பிடித்துள்ளன. அதாவது, Lausanne, 21ஆவது இடத்திலும், சூரிச், 34 ஆவது இடத்திலும் உள்ளன.