மெஸ்ஸி, எம்பாப்பே, நெய்மர் பெயர்கள் விருதுக்கு பரிந்துரை: புறக்கணிக்கப்பட்ட ஜாம்பவான் ரொனால்டோ!
கடந்த ஆண்டுக்கான ஃபிபாவின் சிறந்த வீரர்கள் விருதுக்கான பெயர் பட்டியலில் போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் இடம்பெறாதது குறித்து கால்பந்து ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
ரொனால்டோவின் பெயர் இல்லை
கத்தாரில் கடந்த ஆண்டு FIFA உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றது, இதில் கத்தாரில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெற்ற FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின.
இந்த போட்டியில் கைலியன் எம்பாப்பேவின் பிரான்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட் அவுட் மூலம் 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இவ்வாறு சிறப்பாக நடந்து முடிந்த FIFA உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு, ஃபிஃபா அமைப்பு கடந்த ஆண்டுக்கான சிறந்த வீரர்கள் விருதுக்கான வீரர்களின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
இதில் லியோனல் மெஸ்ஸி, கைலியன் எம்பாப்பே மற்றும் நெய்மர் ஆகியோருடன் சேர்த்து பல வீரர்களின் பெயர்களை விருதுக்காக ஃபிஃபா அமைப்பு பரிந்துரைத்துள்ளது, இது தொடர்பான அறிவிப்பை உலக கால்பந்து நிர்வாகக் குழு வியாழக்கிழமை வெளியிட்டு இருந்தது.
ஆனால் ஃபிஃபா அமைப்பு பரிந்துரைத்துள்ள இந்த வீரர்களின் பெயர் பட்டியலில் போர்ச்சுகல் நட்சத்திரம் மற்றும் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கத்தார் உலக கோப்பை போட்டிகள் பிறகு மான்செஸ்டர் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொண்ட போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது சவுதி அரேபியாவின் கால்பந்து கிளப் அணியான அல் நஸருடன் 173 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது வாக்கெடுப்பு
இதில் சிறந்த ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர், சிறந்த கோல்கீப்பர் மற்றும் 2022 ஆம் ஆண்டின் சிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருது ஆகியவையும் உள்ளன.
ஃபிபாவின் சிறந்த வீரர் யார் என்பதற்கான பொது வாக்கெடுப்பு பிப்ரவரி 3 வரை திறந்திருக்கும் என ஃபிஃபா அமைப்பு தெரிவித்துள்ளது.
தேசிய அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அடங்கிய நடுவர் குழுவால் இவை வாக்களிக்கப்படுகிறது.