பணத்திற்காக கொடூர கொலை; இயக்குனர் பாக்யராஜ் அதிர்ச்சி! காவல்துறை சொல்வது என்ன?
தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளைய வனப்பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் அருகே இருக்கும் ஆற்றில், இரண்டு வருடத்தில் மாத்திரம் 300 பேர் மூழ்கி இறந்துள்ளனர் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணத்திற்காக கொலை செய்யும் கும்பல்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளைய வனப்பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலின் அருகில் இருக்கும் ஆற்றங்கரையில், குளிப்பதற்காக வரும் நபர்கள் ஆற்று நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகின்றனர்.
பின் அவர்களது உடலை மீட்டு எடுப்பதற்காக பணம் கேட்டு வருவதாகவும், இதை ஒரு தொழிலாக முன்னெடுத்து வருவதாகவும் இயக்குநர் பாக்யராஜ் ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகியதோடு மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கோவை மாவட்ட காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கை வெளியிட்ட காவல் துறை
பவானி ஆற்றில் செயற்கையாக மரணங்கள் ஏற்படுத்தப்படுவதாக பரவும் வதந்திகள் ஆதாரமற்றவையாகும். இதுவரையில் ஆற்றில் ஏற்பட்ட கொலை சம்பவங்கள் குறித்து எந்தவொரு வழக்கும் காவல் நிலையத்தில் பதியப்படவில்லை.
பவானி ஆற்றானது மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் சிறுமுகை ஆகிய மூன்று காவல் நிலைய எல்லைகளில் உள்ள சுமார் 20 கிராமங்கள் வழியாக செல்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு தற்செயலாக 20 நபர்கள் மூழ்கி இறந்தனர். இதனால் கோவை மாவட்டம் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் தலைமையில் 10 பயிற்சி பெற்ற காவலர்கள் அடங்கிய சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டது.
இது 2023 ஆம் ஆண்டில் இருந்து “Life Guards” என்ற பெயரில் செயற்பட்டு வருகிறது. இந்த குழுவினர் செயற்பட்டு வருவதனால் தற்செயலாக மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 6 ஆக குறைந்தது.
மேலும் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் பதிவான அனைத்து வழக்குகளையும் முறையாக விசாரித்து இறப்பிற்கான காரணமும் கண்டறிப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறு பரவும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் உண்மையற்றவை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |