ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் கடைசியாக பேசியது என்ன? ஆம்புலன்ஸ் டிரைவர் சொன்ன தகவல்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கடையாக பேசியது குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் சில அதிர்ச்சிகர தகவல்களை தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8ஆம் திகதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் கடுமையான காயத்துடன் மீட்கப்பட்டு பெங்களூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று காலை வருண் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய பிபின் ராவத் உயிருக்கு போராடிய நிலையில் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதன் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சில தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
விபத்து நடத்த இடத்தில் இருந்து பிபின் ராவத் மற்றும் கேப்டன் வருணையும் ஏற்றி கொண்டு மருத்துவமனை நோக்கி வேகமாக புறப்பட்டோம். அப்போது தளபதி பிபின் ராவத் இந்தியில் பேசினார்.
அதனால் அவர் பேசியது எனக்கு சரியாக புரியவில்லை. அருகில் இருந்த மருத்துவ அதிகாரியிடம் அவர் இந்தியில் ஏதோ கூறினார்.
தீவிர நடவடிக்கை எடுத்து தன்னை காப்பாற்றும்படி தளபதி கூறியதாக எனக்கு புரிந்தது. அதன் பிறகு இருவரையும் மருத்துவமனையில் உயிரோடு சேர்த்தோம் என்று மருத்துவமனை உதவியாளரான விக்னேஷ் தெரிவித்துள்ளார்.