கோபத்திலிருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி... சமாதானம் செய்வதற்காக பிரித்தானியாவும் அமெரிக்காவும் எடுத்துள்ள நடவடிக்கை
அவுஸ்திரேலியாவுடனான நீர்மூழ்கிக்கப்பல் தயாரிக்கும் ஒப்பந்தம் ஒன்று கைநழுவிப்போனதால் கடும் கோபத்திலிருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை சமாதானம் செய்யும் முயற்சியில் பிரித்தானிய பிரதமரும், அமெரிக்க ஜனாதிபதியும் இறங்கியுள்ளார்கள்.
பிரான்ஸ் நாடு அமெரிக்காவின் நீண்ட கால கூட்டாளி. அப்படியிருக்கும் நிலையில், பிரான்சுடன் செய்திருந்த நீர்மூழ்கிக்கப்பல் தயாரிப்பு ஒப்பந்தம் ஒன்றை அவுஸ்திரேலியா ரத்து செய்ய, உடனடியாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் அவுஸ்திரேலியாவுடன் நீர்மூழ்கிக்கப்பல் தயாரிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. இதை சற்றும் எதிர்பார்க்காத மேக்ரான் கடுங்கோபம் அடைந்தார். அமெரிக்கா, பிரித்தானியாவுடன் சேர்ந்து அவுஸ்திரேலியா முதுகில் குத்திவிட்டதாக காட்டமாக விமர்சித்தார் அவர்.
ஆகவே, கோபத்தில் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கான பிரான்ஸ் தூதர்களை திரும்ப அழைத்துக்கொண்டார் மேக்ரான்.
இந்த சம்பவம் பிரான்சுடனான பிரித்தானிய மற்றும் அமெரிக்க உறவில் உரசலை ஏற்படுத்தவே, அந்த பதற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் பிரித்தானியாவும், அமெரிக்காவும் இறங்கியுள்ளன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதியுடன் இது குறித்து பேசுவதற்காக தொலைபேசி அழைப்பு ஒன்றிற்கு கோரிக்கை விடுத்துள்ளாராம்.
அத்துடன், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்குமிடையிலான உரசலை குறைக்கும் முயற்சியாக, இந்த திட்டம் பிரான்சை ஓரங்கட்டும் நடவடிக்கை அல்ல என்றும் இது குறித்து யாரும் கவலைப்படத் தேவை இல்லை என்றும், குறிப்பாக நமது பிரான்ஸ் நண்பர்கள் கவலைப்படவேண்டிய விடயமல்ல இது என்றும் நேற்று தெரிவித்துள்ளார்.