அம்பலமான பிரித்தானியாவின் மிகப்பெரிய டீசல் கொள்ளை: போர் கப்பலில் கைவரிசை
பிரித்தானிய கடற்படை போர் கப்பல் ஒன்றில் இருந்து சுமார் 250,000 பவுண்டுகள் மதிப்பிலான டீசல் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.
பிரித்தானிய கடற்படைக்கு சொந்தமான HMS Bulwark என்ற போர் கப்பலே டீசல் கொள்ளைக்கு இலக்காகியுள்ளது. துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த போர் கப்பலில் கொள்ளை கும்பல் திட்டமிட்டு பல வாரங்களாக டீசல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் விலை உச்சத்தை தொட்டிருக்கும் இந்த வேளையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது கடற்படை அதிகாரிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
மட்டுமின்றி பாதுகாப்பு மிகுந்த பகுதியில், கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பாதுகாப்பு அதிகாரிகளை திகைக்க வைத்துள்ளதாகவே கூறப்படுகிறது. மேலும், 250,000 பவுண்டுகளுக்கும் அதிக மதிப்பிலான டீசல் கொள்ளை போயிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
துறைமுகத்தில் இருந்து டாங்கர்களில் டீசல் வெளியே கொண்டுசெல்லும் போதே இந்த கொள்ளை சம்பவம் அதிகாரிகள் பார்வையில் சிக்கியுள்ளது.
மேலும், கடற்படை வீரர்கள் எவருக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பில்லை என்றே முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, கொள்ளையிடப்பட்ட டீசல், அப்போதே விற்பனையும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கொள்ளையர்கள் தொடர்பில் உறுதியான எந்த தகவலையும் கடற்படை தரப்பில் வெளியிடப்படவில்லை.