பிரித்தானியாவின் மிகப்பெரிய வேலைநிறுத்தம்: ரயில் கட்டணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவது?
பிரித்தானியாவின் நவீன கால வரலாற்றில் மிகப்பெரிய ரயில் வேலைநிறுத்தம் அடுத்த வாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களுடன் முன்னெடுக்கப்பட்ட கடைசிகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில், 40,000 ஊழியர்கள், மொத்தம் 13 ரயில் சேவைகளும் திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
இதனால் ஜூன் 21, 23 மற்றும் 25ம் திகதிகளில் தேவை ஏற்பட்டால் மட்டுமே மக்கள் பயணம் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மூன்று நாட்கள் மட்டுமே ரயில் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட உள்ளது என்றாலும், இடைப்பட்ட நாட்களில் ரயில் சேவைகள் தாமதமாகலாம் அல்லது ரத்தாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வாடிக்கையாளர்கள் எவ்வாறு இழப்பீடு பெறலாம் அல்லது வெவ்வேறு நேரங்களில் அல்லது நாட்களில் பயணத்திற்காக தங்கள் ரயில் டிக்கெட்டுகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பில் பல்வேறு ரயில் சேவை நிறுவனங்கள் மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றன.
முன்பதிவு அல்லது சீசன் டிக்கெட்டைப் பயன்படுத்தி பயணம் செய்தால், மக்கள் ஓரளவு பணத்தைத் திரும்பப் பெறலாம். தங்கள் ரயில் 15 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் தாமதமானால் வாடிக்கையாளர்கள் பகுதியளவு பணத்தைத் திரும்பப் பெறத் தகுதியுடையவர்கள்.
மேலும், 15 முதல் 29 நிமிடங்கள் தாமதமானால், ஒற்றை டிக்கெட்டுகளை வைத்திருப்பவர்கள் கட்டணத்தில் 25% தள்ளுபடி பெறுவார்கள். 30 முதல் 59 நிமிடங்கள் வரை தாமதமானால் கட்டணத்தில் 50% தள்ளுபடியும், 60 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் தாமதமானால் கட்டணத்தில் 100% தள்ளுபடியும் பெற முடியும்.
மட்டுமின்றி, பயணிகள் தங்கள் சொந்த விருப்பப்படி பயணம் செய்ய விரும்பவில்லை என்றால், முழு பணத்தையும் திரும்பப் பெறலாம் அல்லது டிக்கெட் திகதியை மாற்றலாம்.