வெறும் 1 ரூபாய்க்கு 40 ஏக்கர் நிலம் - தொழில் தொடங்க அரசு சலுகை
சர்க்கரை ஆலை தொடங்க வெறும் 1 ரூபாய்க்கு 40 ஏக்கர் நிலம் 30 ஆண்டுகளுக்கு வழங்க உள்ளதாக பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது.
1 ரூபாய்க்கு 40 ஏக்கர் நிலம்
இந்தியாவின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி மாநிலமாக ஒரு காலத்தில் பீகார் இருந்தது. இந்தியாவின் முதல் சர்க்கரை ஆலையும் 1904 ஆம் ஆண்டில் சரண் மாவட்டத்தில் உள்ள மர்ஹோராவில் நிறுவப்பட்டது.

பீகார் அமைச்சரவையில் கரும்பு துறைக்கு என தனி அமைச்சரே உள்ளார்.
தற்போது சர்க்கரை தொழிலில் முதலீடுகளை ஈர்க்க, கரும்புத் தொழில் முதலீட்டு ஊக்குவிப்புக் கொள்கை 2026-ஐ பீகார் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளுக்குப் புத்துயிர் அளிப்பதையும், மாநிலம் முழுவதும் 25 புதிய சர்க்கரை ஆலைகளை நிறுவுவதையும் பீகார் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் படி, புதிய சர்க்கரை ஆலைகளை அமைக்கும் முதலீட்டாளர்கள், 40 ஏக்கர் வரையிலான அரசு நிலத்தை 30 ஆண்டு கால குத்தகைக்கு வெறும் 1 ரூபாய்க்குப் பெறலாம்.
மேலும், சர்க்கரை ஆலைத் திட்டங்களுக்காக முதலீட்டாளர்கள் வாங்கும் நிலங்களுக்கான பதிவு மற்றும் முத்திரைக் கட்டணங்களை 100 சதவீதம் திரும்ப வழங்குகிறது.
சர்க்கரை உற்பத்தியாளர்கள், 5 ஆண்டுகளுக்கு சர்க்கரை உற்பத்திக்கான மாநில சேவை வரியையும் (SGST) முழுமையாகத் திரும்பப் பெறுவார்கள்.
ஒரு நாளைக்கு 5,000 டன் கரும்பை அரைக்கும் திறன் (TCD) கொண்ட சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.100 கோடி வரையும், 3,500 டன் உற்பத்தித் திறன் கொண்ட புதிய ஆலைகளுக்கு ரூ.70 கோடி வரையிலும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளும் தற்போதுள்ள சர்க்கரை ஆலைகளும் இந்த ஊக்கத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும்.
சர்க்கரை உற்பத்திக்கு மட்டுமல்லாது, சாராய ஆலைகள், எத்தனால் உற்பத்தி வசதிகள், மின் உற்பத்தி அலகுகள் மற்றும் அழுத்தப்பட்ட உயிரிவாயு (CBG) ஆலைகள் போன்ற அதனுடன் தொடர்புடைய தொழில்களுக்கும் இந்த கொள்கை ஆதரவை விரிவுபடுத்துகிறது.
கரும்புத் தொழில்துறை அமைச்சர் சஞ்சய் குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில், மாநிலத்தில் கரும்பு சார்ந்த ஆராய்ச்சி, தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பீகார் கரும்பு தொழில்துறை, கோயம்புத்தூரில் உள்ள ICAR கரும்பு இனப்பெருக்க நிறுவனம் மற்றும் பாட்னா ஐஐடி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |