பிரித்தானியாவின் பணக்கார குடும்பம் மீது ஆட்கடத்தல் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஐந்து விடயங்கள்
பிரித்தானியாவின் பணக்கார குடும்பங்களில் ஒன்று என கருதப்படும் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் மீது ஆட்கடத்தல் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.
பிரித்தானியாவின் பணக்கார குடும்பம்
பிரித்தானியாவின் பணக்கார குடும்பங்களில் ஒன்றான ஹிந்துஜா குடும்பம், பதினொரு துறைகளில் கோலோச்சும் ஒரு கூட்டு நிறுவனமாகும்.
இந்தக் குழுமத்தின் உரிமையாளர்களான ஹிந்துஜா சகோதரர்களுக்கு உலகம் முழுவதும் சுமார் 37 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
ஹிந்துஜா குடும்பத்தின் உறுப்பினர்கள் மீது ஆட்கடத்தல் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அந்த வழக்கு தொடர்பில் ஐந்து அதிர்ச்சியூட்டும் விடயங்கள் வெளியாகியுள்ளன.
1. ஹிந்துஜா குடும்பம் தங்கள் ஊழியர் ஒருவருக்குக் கொடுத்த ஊதியத்தைவிட, தங்கள் வளர்ப்பு நாயின் செலவுக்காக அதிகம் செலவிட்டதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
2. தங்கள் வீட்டில் வேலை செய்தவர்கள், அனுமதியின்றி வளாகத்தை விட்டு வெளியேறுவதற்கான சுதந்திரத்தை கட்டுப்படுத்தி, இந்தியாவில் இருந்து வந்த அவர்களது பாஸ்போர்ட்களை ஹிந்துஜா குடும்பத்தினர் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. இது சுவிஸ் சட்டத்தின் கீழ் ஆட்கடத்தல் குற்றமாகும்.
3. ஊழியர்களுக்கு இந்திய பணத்தில் ஊதியம் வழங்கப்பட்டதால், சுவிட்சர்லாந்தில் அவர்களுக்கு செலவு செய்ய பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
4. ஊழியர்களுக்கான ஒப்பந்தங்களில், அவர்களுடைய வேலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களைக் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஹிந்துஜா குடும்பத்தினர் எப்போதெல்லாம் அழைக்கிறார்களோ, அப்போதெல்லாம் பணியாளர்கள் வேலைக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தெளிவின்மை, பணியாளர்களை ஏமாற்ற வழிவகை செய்வதாக சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளார்கள்.
5. குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஹிந்துஜா குடும்பத்தின் சட்டத்தரணி, அவர்கள் தங்கள் ஊழியர்களை மரியாதையுடன் நடத்தியதாகவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட தங்குமிடம் மற்றும் உணவும் ஊதியத்தின் ஒரு பகுதிதான் என்றும் வாதிட்டுள்ளனர். பணியாளர்கள், ஹிந்துஜா குடும்பத்திற்கு மீண்டும் மீண்டும் வேலைக்குத் திரும்பியதை அவர்கள் சுட்டிக்காட்டி, இது அவர்களின் வேலையில் அவர்கள் திருப்தியாக உள்ளதைக் காட்டுவதாக அவர்கள் வாதிட்டனர்.
பிரகாஷ் ஹிந்துஜா, அவரது மனைவி கமல், அவர்களது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகியோருக்கு நீண்ட கால சிறைத் தண்டனை வழங்குமாறு சட்டத்தரணிகள் இப்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், நீதிமன்ற செலவுகளுக்காக ஹிந்துஜா குடும்பம் 1 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 3.5 மில்லியன் பிராங்குகள் இழப்பீட்டு வழங்கவேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |