உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா இப்படிப்பட்டவரா? நெகிழ்ச்சி தகவல்கள்
ஹெலிகாப்டர் விபத்தில் கணவர் பிபின் ராவத் உடன் சேர்ந்து உயிரிழந்த அவர் மனைவி மதுலிகா குறித்து பலருக்கும் தெரியாத புதிய நெகிழ்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முப்படை தலைமைத் தளபதி, ஜெனரல் பிபின் ராவத் புதன்கிழமையன்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷாதோல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஷாதோலில் அமைந்துள்ள சோஹாக்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மதுலிகா ராவத்.
அவருடைய தந்தை ம்ரேகேந்திர சிங் தற்போது உயிருடன் இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். பிபின் ராவத் கடைசியாக ஷாதோலுக்கு 2012-ம் ஆண்டு சென்றுள்ளார். மதுலிகா ராவத் தனது ஆரம்பக்கட்ட படிப்பை ஷாதோலில் முடித்தார். அதன்பிறகு மேல் படிப்பிற்காக குவாலியர் சென்று, சிந்தியா பள்ளியில் படித்தார்.
பின்னர், டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1986-ம் ஆண்டு பிபின் ராவத்திற்கும் மதுலிகாவிற்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகளுக்குத் திருமணமாகிவிட்டது. இரண்டாவது மகள் படித்துக் கொண்டிருக்கிறார். அவர், ராணுவ வீரர்களின் மனைவிகள் நல சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர்.
அதன் இணைய பக்கத்தில், இது ராணுவ வீரர்களின் மனைவிகள், குழந்தைகள் மற்றும் ராணுவ வீரர்களை சார்ந்திருப்பவர்களுக்காகச் செயல்படும் அமைப்பு என விவரிக்கப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்களின் மனைவிகள் நலச் சங்கம் 1966-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும், இது நாட்டின் மிகப்பெரிய தன்னார்வ நிறுவனங்களில் ஒன்றாகவும் கூறப்படுகிறது.
கணவரை இழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள், புற்றுநோயாளிகள், ஊனமுற்ற குழந்தைகளுக்களுக்கு உதவி செய்யும் சமூகப் பணிகளில் ஈடுபட்டார் மதுலிகா ராவத் என தெரியவந்துள்ளது.