பிபின் ராவத் மற்றும் மனைவி மதுலிகா உடலுக்கு தீ மூட்டிய மகள்கள்! அஸ்தி கரைப்பு குறித்து முக்கிய தகவல்
முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவர் மனைவி மதுலிகாவின் உடல்கள் தகனம் செய்யப்பட்ட நிலையில் அவர்களின் அஸ்தி இன்று ஹரித்வாருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த 8ஆம் திகதி பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் உடல்கள் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கண்டோன்மெண்ட்டில் உள்ள மயானத்தில் ஒரே தகன மேடையில் இருவரின் உடலும் அருகருகே தகனம் செய்யப்பட்டது.
தந்தை பிபின் ராவத், தாய் மதுலிகாவின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்த அவரது மகள்கள், தீ மூட்டினர். 17 சுற்று குண்டுகள் முழங்க 800 வீரர்களின் மரியாதையுடன் பிபின் ராவத் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இருவரின் அஸ்தியும் இன்று ஹரித்வாருக்கு எடுத்து செல்லப்படும் என அவர்களின் குடும்பத்தார் கூறியுள்ளனர்.
அதன்படி கலசத்தில் அவர்களின் அஸ்தி எடுத்து செல்லப்பட்டு புனித கங்கையில் கரைக்கப்பட்டு சில பாரம்பரிய சடங்குகள் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.