103,000 டொலரை தொட்ட Bitcoin... கோடிகளை அள்ளும் முதலீட்டாளர்கள்: ஜனவரியில் புதிய ஆட்டம்
கிரிப்டோ சந்தையில் முன்னணி காயினான Bitcoin முதன்முறையாக 1 லட்சம் டொலர் என்ற இலக்கைக் கடந்து தற்போது 103,000 டொலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
கிரிப்டோ வர்த்தகர்கள்
எதிர்வரும் ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டொனால்டு ட்ரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக பிட்காயின் சிறப்பான முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
ட்ரம்ப் பதவியேற்றதும் கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையில் பிட்காயின் சமீப நாட்களாக உயர்வை சந்தித்து வருகிறது.
ட்ரம்ப் நிர்வாகம் கிரிப்டோகரன்சி நட்புக் கொள்கையை கொண்டு வர முடியும் என்று கிரிப்டோ வர்த்தகர்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாக பிட்காயினில் சாதனை உயர்வு காணப்படுகிறது.
அதேபோல், பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பேசியுள்ளதும் பிட்காயின் விலை அதிகரிப்பிற்கு வழிவகுத்துள்ளது. கடந்த நவம்பர் 5 ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து பிட்காயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தேர்தல் பரப்புரையின் போது, அமெரிக்காவை உலகின் பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி தலைநகராக மாற்றுவதாக ட்ரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். அதேபோல், Paul Atkins என்பவரை செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் (SEC) தலைவராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதால் பிட்காயின் தொடர்ந்து ஏற்றம் பெற்றுள்ளது.
2 லட்சம் டொலர்களாக இருக்கும்
2024ல் மட்டும், பிட்காயின் விலை 134 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் நவம்பர் 5ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து பிட்காயின் மதிப்பு 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
2025ல் பிட்காயின் விலை 2 லட்சம் டொலர்களாக இருக்கும் என்று பெர்ன்ஸ்டீனின் நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது தற்போதைய நிலையில் இருந்து Bitcoin விலையில் இரட்டை உயர்வு ஏற்படலாம் என்றே கணித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போது, டொனால்டு ட்ரம்ப் கிரிப்டோகரன்சி ஆதரவாளர்களிடமிருந்து பெரும் நிதி ஆதரவைப் பெற்றார். அவர்களில் சிலர் குடியரசுக் கட்சியின் மெகா நன்கொடையாளர் எலோன் மஸ்க் உள்ளிட்டோருக்கு நெருக்கமானவர்கள் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிட்காயின் 100,000 டொலர் மதிப்பை எட்டிய செய்திக்கு எக்ஸ் பக்கத்தில் பதிலளித்த மஸ்க் ’பிரமாதம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |