பிரித்தானியர் ஒருவருக்கு பேரிடியாக மாறிய 600 மில்லியன் பவுண்டு பிட்காயின்
பிரித்தானியர் ஒருவர் 12 ஆண்டுகளுக்கு முன்னர் தவறுதலாக குப்பையில் வீசிய பிட்காயின் சேமிப்பு ஹார்ட் டிரைவை மீட்கும் முயற்சியில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கோரிக்கையை நிராகரித்தது
தற்போதைய மதிப்பில் 600 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான பிட்காயின் தொகுப்பை நிரந்தரமாக இழக்கும் கடும் நெருக்கடிக்கு 39 வயதான James Howells தள்ளப்பட்டுள்ளார்.
வேல்ஸின் நியூபோர்ட்டில் தனது கிரிப்டோகரன்சி அடங்கிய ஹார்ட் டிரைவை மீட்கும் பொருட்டு James Howells நீதிமன்றத்தை நாடியிருந்தார். மட்டுமின்றி, தேடுதல் நடவடிக்கைகளுக்கான மொத்த செலவும் மீட்கப்பட்ட பிட்காயினில் 25 சதவிகிதத்தை நியூபோர்ட் நகர சபைக்கு வழங்கவும் ஹோவெல்ஸ் உறுதி அளித்திருந்தார்.
இருப்பினும், நகரசபை அவரது கோரிக்கையை நிராகரித்தது, ஹோவெல்ஸ் தனது தொலைந்த கிரிப்டோகரன்சியை மீட்டெடுக்க பத்தாண்டு காலமாக முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை, வேல்ஸிற்கான சர்க்யூட் வணிக நீதிமன்றத்தில், நீதிபதி கீசர், அகழ்வாராய்ச்சியை நடத்த அனுமதி கோரிய ஹோவெல்ஸின் வழக்கை தள்ளுபடி செய்ததாக அறிவித்துள்ளார்.
நீதிபதி கீசர் தமது தீர்ப்பில் தெரிவிக்கையில், ஹோவெல்ஸிடம் இந்தக் கோரிக்கையை தாக்கல் செய்வதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்றும், வழக்கு விசாரணைக்கு வந்தால் வெற்றி பெறுவதற்கான யதார்த்தமான வாய்ப்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முடிவை எதிர்பார்க்கவில்லை
மேலும், அந்த ஹார்ட் டிரைவ் தற்போது தங்களுக்கு சொந்தமானது என்ற நகரசபையின் வாதத்தை நீதிபதி உறுதி செய்ததுடன், ஹோவெல்ஸுக்கு அதில் எந்த உரிமையும் இல்லை என்றும் தீர்ப்பளித்தார்.
வெளியான தீர்ப்புக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள ஹோவெல்ஸ், கனவில் கூட இப்படியான ஒரு முடிவை எதிர்பார்க்கவில்லை என்றார். தமது வாதத்தை விரிவாக முன்வைக்க நீதிமன்றம் தொடக்கத்திலேயே மறுத்து வந்ததாகவும், எந்த வகையிலும் நீதி கிடைப்பதை அது தடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளாக நியூபோர்ட் நகர சபையுடன் தனது தொடர்ச்சியான முயற்சிகளையும் அவர் குறிப்பிட்டார். இந்த தீர்ப்பு தம்மிடம் இருந்த அனைத்தையும் எடுத்துவிட்டு, கைவிட்டுள்ளதாக கலங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |