8 மாதங்களாக நதியை சுத்தப்படுத்திய இளைஞர்; ஒரே மாதத்தில் குப்பையாக்கிய ஊர் மக்கள்
bittu tabahi says my 8 month hard work wasted river again polluted: 20 வயது இளைஞரான பிட்டு தபாஹி கடந்த 8 மாதங்களாக தனிநபராக சுத்தம் செய்த அஜ்நார் நதி, ஒரே மாதத்தில் மீண்டும் மாசுபட்ட நிலையில், அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
8 மாதங்களாக நதியை சுத்தப்படுத்திய பிட்டு தபாஹி
மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோராவைச் சேர்ந்த 20 வயது இளைஞரான பி.எஸ்சி மாணவர் சுரேந்திர சிங், சமூக ஊடகங்களில் பிட்டு தபாஹி(bittu tabahi) என்று அறியப்படுகிறார்.

கடுமையாக மாசுபட்டிருந்த அஜ்நார் நதியை(Ajnar River) தன்னுடைய சேமிப்பு ரூ.30,000 பயன்படுத்தி, கடந்த 8 மாதங்களாக தனிநபராக சுத்தம் செய்தார்.
நதியை சுத்தம் செய்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், பிட்டு தபாஹியை தனது வீட்டிற்கு அழைத்து "உன்னால் இந்த மாநிலமே பெருமை கொள்கிறது" என பாராட்டியுள்ளார்.
நெதர்லாந்தை சேர்ந்த The Ocean Cleanup என்ற நிறுவனம் அவரை அவருக்கு வேலை வழங்க முன்வந்தது.
ஒரே மாதத்தில் மாசுபட்ட நதி
இந்நிலையில், பிட்டு தபாஹி தனிநபராக 8 மாதங்களாக சுத்தம் செய்த நதியை ஊர்மக்கள் மீண்டும் ஒரே மாதத்தில் மாசு படுத்தியுள்ளனர்.

தற்போது மீண்டும் அந்த நதியை சுத்தப்படுத்த தொடங்கியுள்ள பிட்டு தபாஹி, "எனது 8 மாதக் கடின உழைப்பு இப்படி வீணாகிவிடும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆற்றில் இருந்து மேலும் குப்பைகளைத் திறம்பட அகற்றுவது எப்படி என்பது குறித்த ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் இணையப் பயனர்களைக் கேட்டுக்கொண்டார்.
மாநகராட்சியிடம் பேசி, இங்கு குப்பைகளைக் கொட்டுவதற்கு அபராதம் விதிக்கச் செய்யுங்கள். இல்லையெனில், இது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்," என்று பயனர் ஒருவர் பரிந்துரைத்தார்.