ஜேர்மன் உளவுத்துறையில் கருப்பு ஆடுகள்: அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட உலகம் சுற்றும் வைர வியாபாரி...
ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக ஜேர்மன் உளவுத்துறையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஜேர்மானியர் ஒருவர் கைது செய்யப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரபல கால்பந்து பயிற்சியாளரின் இன்னொரு முகம்
ஜேர்மனியின் பவேரியாவிலுள்ள Weilheim நகரில் இளைஞர்கள் பலருக்கு கால்பந்து பயிற்சி அளித்துவந்தவர் Carsten Linke (52). ஒரு தந்தைபோல் அக்கறை காட்டி, பல இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துவந்த Carsten, அவ்வப்போது காணாமல் போய்விடுவாராம்.
உண்மை என்னவென்றால், தன் ஊரில் ஒரு கால்பந்து பயிற்சியாளராக இருந்த Carsten, ஜேர்மன் உளவுத்துறையில் பெரிய பொறுப்பு ஒன்றை வகித்துவந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் Carsten திடீரென கைது செய்யப்பட்டார். உக்ரைன் தொடர்பான சில உளவுத்துறை இரகசியங்களை ரஷ்யாவுக்கு அளித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மேலும் ஒருவர் கைது
Carsten கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, Arthur E. என்னும் உலகம் சுற்றும் வைர வியாபாரி ஒருவர் மியாமியில் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் ப்ளோரிடாவில் வாழ்கிறார்கள். இந்த Arthur மூலமாகத்தான் Carsten ரஷ்யாவுக்கு இரகசிய செய்திகள் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆகவே, அமெரிக்க அதிகாரிகள் Arthurஐ ஜேர்மனிக்கு அழைத்துவந்து ஜேர்மன் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்கள்.
Arthur ரஷ்யாவில் பிறந்தவராவார். ஜேர்மன் பெற்றோருக்குப் பிறந்த அவர், 1900களின் ஆரம்பத்தில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்துள்ளார். ஜேர்மன் இராணுவத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி, பின்னர் 2015இல் சொந்தத் தொழிலைத் துவக்கியுள்ளார். தற்போது அவர் ரஷ்யக் குடியுரிமை வைத்திருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உக்ரைன் போர் துவங்கிய பிறகு, பலமுறை ரஷ்யாவுக்கு பயணித்துள்ளார் Arthur. அதுமட்டுமின்றி, வைர வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துள்ள அவர் ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் என உலக நாடுகள் பலவற்றை சுற்றிவந்துள்ளார்.
இதற்கிடையில், Carsten, மாஸ்கோவிலிருந்து திரும்பிய Arthurஇடமிருந்து பணம் அடங்கிய கவர் ஒன்றைப் பெறுவதற்கு, ஜேர்மன் உளவுத்துறையில் பணியாற்றும் மற்றொரு அலுவலரை அனுப்பியுள்ளார். அந்த அலுவலர் Munich விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் சுங்க அதிகாரிகளைக் கடந்து வர Arthurக்கு உதவியுள்ளார்.
அவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆகவே, Carsten ஜேர்மன் உளவுத்துறையிலேயே மறைந்திருக்கும் ஒரு பெரிய ரஷ்ய உளவாளிகள் கூட்டத்தில் ஒருவராக இருக்கக்கூடுமா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்துவருகிறார்கள்.
ஆக, ஜேர்மன் உளவுத்துறையிலேயே கருப்பு ஆடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.