ஜேர்மனி போன்ற நிலை வரலாம்... மில்லியன் கணக்கான பிரித்தானியர்களுக்கு விடுக்கப்படும் கோரிக்கை
ஐரோப்பிய நாடுகள் போன்று இருளில் மூழ்கும் ஆபத்து இருப்பதால் எரிசக்தியை சேமிக்கும் பொருட்டு மில்லியன் கணக்கான பிரித்தானியர்களுக்கு கோரிக்கை விடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மில்லியன் கணக்கான பிரித்தானிய குடும்பங்களிடம் தங்கள் தெர்மோஸ்டாட்கள் மற்றும் தேவையற்ற விளக்குகளையும் அணைக்கும்படி கேட்கப்படலாம்.
பிரித்தானியாவில் எரிவாயு மற்றும் மின்சார விநியோக பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் பல அவசரகால தற்செயல் திட்டங்களை வகுத்துள்ளது.
மட்டுமின்றி, தேசிய கிரிட் ஏற்கனவே தொழில்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பில் சந்திப்புகளை நடத்தியுள்ளது.
ஏற்கனவே ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் குடிமக்களிடம் இது தொடர்பில் கோரிக்கை வைத்துள்ளது. குளிக்கும் நேரத்தை குறைப்பது மற்றும் விளக்குகளை அணைத்து எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அந்தவகையில், இந்த குளிர்காலத்தில் மொத்தமாக இருளில் மூழ்கும் அபாயத்தைத் தவிர்க்க இங்கிலாந்து அரசாங்கம் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் வாயிலாகவும், சுவரொட்டிகள் எனவும் இந்த திட்டத்தை விளம்பரப்படுத்த முடிவாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவுக்கான எரிவாயு விநியோகம் சமீபத்திய மாதங்களில் குறைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா ஏற்கனவே Nord Stream 1 திட்டம் வழியாக ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தை பெருமளவு குறைத்துள்ளது. இந்த நிலையில், இந்த குளிர்காலத்தில் சுமார் ஆறு மில்லியன் பிரித்தானிய குடும்பங்கள் மின்வெட்டை எதிர்கொள்ள நேரிடும் என்று போரிஸ் அரசாங்க அமைச்சர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.
மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், முன்னாள் நிதியமிச்சர் ரிஷி சுனக், வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் போராடும் குடும்பங்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை அறிவித்தார்.
அதில், வீட்டு மின் இணைப்பு உள்ள அனைத்து வீடுகளுக்கும் அக்டோபர் முதல் £400 மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையானது மானியம் என்பதால் திருப்பிச் செலுத்த தேவையில்லை, மட்டுமின்றி இந்த திட்டம் அனைவருக்கும் பொதுவனது என்பதால் மனு அளிக்கவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.