நெருங்கும் இரண்டாவது சுற்று... புதிய அரசியல் நகர்வு: கடும் கோபத்தில் தீவிர வலதுசாரிகள்
பிரான்ஸ் தேர்தலின் இரண்டாவது சுற்று நெருங்கும் நிலையில், தீவிர வலதுசாரிகளின் ஆட்சியை தடுக்கும் நோக்கில் இதுவரை 218 வேட்பாளர்கள் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
218 வேட்பாளர்கள் விலகல்
பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கான இரண்டாவது சுற்று தேர்தல் எதிர்வரும் ஞாயிறன்று முன்னெடுக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஞாயிறன்று நடந்த முதற்கட்ட தேர்தலில் தீவிர வலதுசாரிகள் கூட்டணி பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ள நிலையில்,
இரண்டாவது சுற்றானது தீவிர வலதுசாரிகளுக்கும் தீவிர இடதுசாரிகள் கூட்டணிக்கும் எதிரான போட்டியாக மாறியுள்ளது. இந்த நிலையில், வாக்குகளை சிதறடிக்காமல் இருக்க, மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் போட்டியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளனர்.
இது தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கத்தை தடுக்கும் என்றே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. இதன்படி சுமார் 2014 முதல் 218 வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் 300 தொகுதிகளுக்கு மேல் மும்முனைப் போட்டி ஏற்படவிருந்த நிலையில், தற்போது சுமார் 108 தொகுதிகளில் மட்டும் மும்முனைப் போட்டிக்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
எஞ்சிய தொகுதிகள் அனைத்திலும் இருமுனைப் போட்டிக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன் மூலமாக தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கத்தை முறியடிக்க முடியும் என அரசியல் கட்சிகள் நம்புகின்றன.
Jordan Bardella கடும் கண்டனம்
மேலும், கடந்த ஞாயிறன்று நடந்த முதற்கட்ட தேர்தலில் Marine Le Pen முன்னெடுக்கும் தீவிர வலதுசாரிகளின் கூட்டணி சுமார் 33 சதவிகித வாக்குகளை அள்ளியது.
ஆனால் மொத்தமுள்ள 577 ஆசனங்களில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற தீவிர வலதுசாரிகளின் திட்டத்தை முறியடிக்கும் முடிவுடன் எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளன.
மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட இடதுசாரிகள் அல்லது நடுநிலையாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளதால் இனி National Rally கட்சிக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் ஒரே ஒரு வேட்பாளருக்கு செல்ல உள்ளது.
இதனூடாக National Rally கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என்றும் நம்புகின்றனர். ஆனால் தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான இந்த அதிரடி அரசியல் நகர்வுகளை சற்றும் எதிர்பார்க்காத National Rally கட்சியின் தலைவரும் அடுத்த பிரதமராக வர வாய்ப்புள்ளவருமான Jordan Bardella கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், National Rally கட்சி கூட்டணிக்கு அறுதிப் பெருபான்மை கிடைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க உரிமை கோர இருப்பதாகவும் அதன் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |