இந்தியாவில் BMW C400 GT ஸ்கூட்டர் டெலிவரி தொடங்கியது! விலை என்ன தெரியுமா?
BMW மோட்டாராட் நிறுவனத்தின் C400 GT ஸ்கூட்டரின் டெலிவரி கடந்த வாரம் முதல் இந்தியாவில் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் ஒரு சிறந்த பட்ஜெட் கார் வாங்கும் விலையில் இந்த BMW களமிறக்கப்பட்டுள்ளது. இப்போது சந்தைக்கு வந்திருக்கும் இந்த ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 9.95 லட்சம். இந்த ஸ்கூட்டர் நகர்புற வாடிக்கையாளர்களை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலையை கேட்டதும் நீங்கள் அதிர்ச்சியில் மிரண்டுபோயிருக்கலாம்! ஆனால் இந்த ஸ்கூட்டர், இந்தியாவில் இருக்கும் சந்தை நிலவரத்தை பகுபாய்வு செய்து களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது மேக்ஸி ரக ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்தப் பிரிவில் மிகக் குறைவான ஸ்கூட்டர்கள் இருப்பதால், அந்த மார்க்கெட்டை குறிவைத்து C 400 GT ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஸ்கூட்டர் பிரிவில் அதிக விலையில் வந்திருக்கும் இந்த ஸ்கூட்டர், முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையிலேயே (completely built-up unit) சந்தைக்கு வந்திருப்பது, புது ஃபார்மெட்டாக இருக்கிறது. உபகரணங்களைப் பொறுத்தவரை 350சிசி வாட்டர் கூல்டு சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் எஞ்ஜின் இருக்கிறது.
இந்த எஞ்ஜின் 25கிலோவாட் (34 எச்பி) திறனையும், 35 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். எஞ்ஜினைப் பொறுத்தவரை உச்சபட்சமாக மணிக்கு 139 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. பூஜ்ஜிய வேகத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை சுமார் 9.5 நொடிகளிலேயே எட்டிப் பிடிக்கும்.
மேலும் மல்டி பங்ஷ்னல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 6.5 இன்சிலான முழு வண்ண டிஎஃப்டி ஸ்கிரீன், மொபைல் இணைப்பு வசதி உள்ளிட்டவை சி 400 ஜிடி ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளது.
இதற்காக பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள பி.எம்.டபள்யூ மோட்டாராட் இணைப்பு செயலியையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியைப் பயன்படுத்தி, ஸ்கூட்டரை செல்போன் மூலம் கன்ட்ரோல் செய்து கொள்ளும் வசதி பிரத்யேகமாக கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமான சில அம்சங்களை இந்த ஆப் வழியாக கன்ட்ரோல் செய்யலாம். இத்துடன், தானியங்கி ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், யுஎஸ்பி சார்ஜிங் பெரிய ஸ்டோரேஜ் வசதி உள்ளிட்டவையும் பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது.
கலரைப் பொறுத்தவரை இரண்டு நிறங்களில் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அல்பைன் வெள்ளை மற்றும் ஸ்டைல் டிரிபிள் கருப்பு ஆகிய நிறங்களில் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.