ஆசை மனைவிக்காக கப்பல் வடிவில் வீடு கட்டிய கணவர்! நெகிழ்ச்சி சம்பவம்
தமிழகத்தில் ஆசை மனைவிக்காக 1.5 கோடி ரூபாய் செலவில் கப்பல் வடிவில் வீடு கட்டிய கணவனின் செயல் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
மனைவியின் மீதான காதலை பலரும் பலவிதமான வழிகளில் வெளிப்படுத்துவார்கள், மனைவிக்காக சிலை வடிவமைப்பது, லட்சங்கள் செலவழித்து மனைவியின் ஆசையை நிறைவேற்றுவது என பல விடயங்களை கேள்விப்பட்டிருப்போம்.
இந்த பதிவில் தமிழகத்தின் கடலூரை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவிக்காக கப்பல் வடிவில் வீடு கட்டி அசத்தியுள்ளார்.
கடலூர் சிங்காரத்தோப்பை சேர்ந்த தம்பதியினர் சுபாஷ் (வயது 42)- சுபஸ்ரீ (41).
மரைன் இன்ஜினியராக பணியாற்றும் சுபாஷ்க்கு 2 மகள்கள் இருக்கின்றனர், கணவர் வேலை செய்யும் கப்பலை பார்க்க வேண்டுமென சுபஸ்ரீ பல ஆண்டுகளாக கூறிவந்துள்ளார்.
ஆனால் அது சரக்கு கப்பல் என்பதால் மனைவியை அழைத்து செல்ல முடியவில்லை, இந்நிலையில் கப்பல் போன்று வீடு கட்டி தருவதாக சுபாஷ் மனைவியிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.
இதன்படி கப்பல் வடிவில் பிரம்மாண்ட வீட்டை வடிவமைத்துள்ளார், சுமார் 2 ஆண்டுகளாக கடினமான உழைப்புடன் கப்பல் போன்ற வீட்டில் சுற்றி தண்ணீர் இருப்பது போன்றும், படிக்கட்டுகள், அறைகள் என கப்பல் போன்ற உணர்வை கொடுக்கும் விதமாக பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளார்.
மேலும் அதில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், கேப்டன் அமரும் அறை என முழுவதுமாக கப்பல் போன்ற உணர்வை கொடுத்துள்ளார்.
இந்த பிரம்மாண்ட வீடு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அனைவரையும் வெகுவாக கவர்ந்துவிட்டது, அதுவும் இரவு நேரத்தில் மின்னொளியால் ஜொலிக்கும் வீட்டை பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கிறது.
மிக முக்கியமாக குடும்பத்தில் உள்ளவர்களின் முதல் எழுத்தை சேர்த்து கப்பலுக்கு S4 எனவும் பெயர் சூட்டியுள்ளார்.