திருமணத்தன்றே கார் மோதி உயிரிழந்த மணப்பெண்: குற்றவாளி பெண்ணின் புதிய காணொளி
அமெரிக்காவில் மணப்பெண் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட பெண் தனது கைது குறித்து புலம்பும் காணொளி வெளியாகியுள்ளது.
மணப்பெண் மரணம்
அமெரிக்காவின் சார்லஸ்டனில், கடந்த 2023ஆம் ஆண்டு எரிக் ஹட்சின்சன், சமந்தா மில்லர் ஆகிய புதுமணத் தம்பதியின் கோல்ஃப் வாகனத்தின் மீது அதிவேகத்தில் வந்த கார் மோதியது.
இதில் 34 வயதான சமந்தா மில்லர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஹட்சின்சனுக்கு இரண்டு கால்களிலும் எலும்பு முறிவுகள், முகத்தில் பலத்த எலும்பு முறிவுகள் மற்றும் மூளையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
வாடகை கார் மூலம் இந்த விபத்தை ஏற்படுத்திய ஜேமி லீ கொமோரோஸ்கி என்ற பெண், சில கணங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் பிணை இல்லாமல் காவலில் வைக்கப்பட்ட கொமோரோஸ்கி, மார்ச் 2024-யில் 150,000 டொலர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இறுதியில், அவர் கவனக்குறைவான கொலை, குடிபோதையில் வாகனம் ஓட்டியது மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டி பெரும் உடல் காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்திய இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
மேலும் தனது குற்றத்திற்காக மன்னிப்பு கோரிய போதிலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மது அருந்தி வாகனம் ஓட்டி இருவருக்குக் கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்திய குற்றங்களுக்காக தலா 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மது அருந்தி வாகனம் ஓட்டிய தீவிர குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்டன.
கமெரா காட்சிகள்
இந்த நிலையில் அவர் மீது தற்போது ஒரு தவறான மரணம் தொடர்பான சிவில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது; இவ்வழக்கை ஹட்சின்சன் அவர் மீதும், அன்று இரவு அவருக்கு மது பரிமாறிய மதுக்கூடங்கள் மீதும் தொடுத்துள்ளார்.
இதற்கிடையில், WCSC வெளியிட்ட புதிய பாதுகாப்பு கமெரா காட்சிகளில் தனது கைது தொடர்பான நடைமுறைகளை மேற்கொண்டிருந்த அதிகாரிகளிடம், "நான் இதை முடித்துக்கொண்டு வீட்டிற்கு செல்ல விரும்புகிறேன்" என்று அவர் புலம்புகிறார்.
மேலும், "நான் செய்ததாக கூறப்படும் எந்தவொரு விடயத்திற்கும் யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை" என்று வலியுறுத்திய அவர், தனது தந்தையை அழைக்கலாமா என்று கேட்டார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |