₹1.30 கோடி கேட்டு மிரட்டல் கடிதம்! மனித உடலுடன் வீட்டுக்கு பார்சல்: ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திராவில் மனித உடல் பாகங்களுடன் டெலிவரி செய்யப்பட்ட பார்சலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மனித உடல் பாகங்களுடன் வந்த பார்சல்
ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் யெண்டகண்டி(Yendagandi) கிராமத்தில் வீட்டு கட்டுமான பொருட்களுக்கு பதிலாக மனித உடல் பாகங்கள் அடங்கிய பார்சல் பெட்டி ஒன்று அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக துளசி என்ற அந்த பெண் வீடு கட்டுவதற்காக க்ஷத்ரிய சேவா சமிதியிடம்(Kshatriya Seva Samithi) நிதி உதவி கோரியுள்ளார்.
ஆரம்பத்தில் க்ஷத்ரிய சேவா சமிதியிடம் இருந்து உதவியாக. வீட்டிற்கான ஓடுகளை(tiles) துளசி பெற்றுள்ளார்.
இதையடுத்து மீண்டும் துளசி உதவி கேட்கவே, சமிதியும் அவருக்கு விளக்குகள், மின்விசிறிகள் மற்றும் சுவிட்சுகள் போன்ற மின்சாதனப் பொருட்கள் அனுப்பப்படும் என்று வாட்ஸ்அப் மூலம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு டெலிவரி நபர் ஒருவர் அவரது வீட்டில் பார்சல் பெட்டி ஒன்றை வழங்கி விட்டு அதில் வாக்குறுதியளிக்கப்பட்ட மின் சாதனங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு பெட்டியைத் திறந்ததும், துளசியும் அவரது குடும்பத்தினரும் ஒரு பயங்கரமான காட்சியைக் கண்டனர்.
பெட்டியில் ஒரு மனிதரின் உடல் பாகங்கள் இருந்தது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, பின் உடனடியாக காவல்துறையினருக்குத் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
₹1.30 கோடி கேட்டு மிரட்டல் கடிதம்
மனித உடல் பாகங்கள் அனுப்பப்பட்ட பெட்டிக்குள் ₹1.30 கோடி கேட்டு கடிதம் ஒன்று இருப்பதையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மிரட்டல் கோரிக்கையை குடும்பத்தினர் நிறைவேற்றத் தவறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அந்த கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
காவல்துறையினர் தற்போது டெலிவரி செய்த நபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், க்ஷத்ரிய சேவா சமிதியின் பிரதிநிதிகளை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின்படி, இறந்தவர் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் என்றும், அவர் கண்டுபிடிக்கப்படுவதற்கு நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |