தேம்ஸ் நதியில் மிதந்த ஆசிய இளைஞரின் சடலம்... வயதான தாயாரின் உருக்கமான வேண்டுகோள்
மேற்கு லண்டனில் குடியிருக்கும் தாயார் ஒருவர் தமது மகனின் கொலை தொடர்பில் விடை தெரிய 25 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
25 ஆண்டுகளாக நீடிக்கும் போராட்டம்
மேற்கு லண்டனில் வசிக்கும் சுக்தேவ் ரீல் என்ற பெண்மணியே, 1997ல் சடலமாக மீட்கப்பட்ட தமது மகன் தொடர்பில் 25 ஆண்டுகளாக போராடி வருகிறார். சம்பவத்தின் போது 20 வயதான ரிக்கி ரீல், அக்டோபர் மாதம் 14ம் திகதி தமது நண்பர்கள் சிலருடன் ஊர் சுற்ற சென்றுள்ளார்.
Image: Humphrey Nemar
ரிக்கி ரீல் உட்பட அவரது நண்பர்கள அனைவரும் தெற்கு ஆசிய நாட்டவர்கள் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் இரு வெள்ளையர்களால் இந்த நண்பர்கள் குழு இனவெறி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
அந்த இரு வெள்ளையர்களும் அருவருப்பான வார்த்தைகளால் இவர்களை திட்டியுள்ளனர். மட்டுமின்றி, மூர்க்கத்தனமாக தாக்கியும் உள்ளனர். இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க, நண்பர்கள் குழு நாலாபக்கமும் சிதறி ஓடியுள்ளது.
ரிக்கி ரீல் மட்டும் சிக்கவில்லை
ஆனால் ரிக்கி ரீல் தவிர எஞ்சிய மூவரும் பின்னர் ஒன்றாக இணைந்துள்ளனர். அவர்கள் மூவரும் அப்பகுதி முழுவதும் தீவிரமாக தேடியும் ரிக்கி ரீல் மட்டும் சிக்கவில்லை. இந்த நிலையில், அக்டோபர் 21ம் திகதி தேம்ஸ் நதியில் ரிக்கி ரீலின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுவரையில் ரிக்கி ரீலின் மர்ம மரணம் தொடர்பில் எவரும் கைதாகவும் இல்லை, எவர் மீதும் விசாரணை முன்னெடுக்கவும் இல்லை என்றே தாயார் சுக்தேவ் ரீல் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதுவரையான தமது போராட்டங்களையும் அனுபவித்த வலியையும் அவர் புத்தமாகவும் வெளியிட்டுள்ளார். பொலிசார் தங்களால் இயன்ற வகையில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர் என கூறும் சுக்தேவ் ரீல், ஆனால் தமது மகனின் மர்ம மரணம் நாளும் தமக்கு வலியாகவே உள்ளது என்கிறார்.
உரிய நீதி கிட்டாமல் அமைதி என்பது வெறும் வார்த்தை தான் என்கிறார் சுக்தேவ் ரீல். ஜூலை மாதம் தம்மை தொடர்புகொண்ட ஒருவர், ரிக்கி ரீல் கொலையில் தொடர்புடையவர் யார் என தெரியும் எனவும் இது இனவெறியால் நேர்ந்த கொலை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக சுக்தேவ் ரீல் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எந்த முடிவும் எட்டாமலே உள்ளது. இதுவரை தமது மகன் கொலை வழக்கில் துப்புத்துலங்காமல் பொலிசார் உள்ளதாகவும், முடிவுக்கு வராத வழக்கு என்ற பட்டியலில் தற்போது இணைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
தேம்ஸ் நதியில் மூழ்கி இறந்திருக்கலாம்
மேலும், இரு வெள்ளையர்களின் தாக்குதலில் இருந்து தப்பிய ரிக்கி ரீல் சிறுநீர் கழிக்க ஒதுங்கிய நிலையில், தவறி தேம்ஸ் நதியில் விழுந்து மூழ்கி இறந்திருக்கலாம் என பொலிசார் அப்போது முடிவுக்கு வந்தனர்.
ஆனால் நீதிமன்ற விசாரணையில், பொலிசார் உரிய சாட்சிகளை முறையாக விசாரிக்கவில்லை எனவும், உரிய நேரத்தில் கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
Image: Humphrey Nemar
ரிக்கி வெள்ளையர் அல்ல என்பதாலையே, பொலிசார் இந்த வழக்கில் தீவிரம் காட்டவில்லை எனவும், உரிய ஆதாரங்களை சேகரிக்க பொலிசார் தவறியதாகவும் சுக்தேவ் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், சம்பவம் நடந்து நீண்ட 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பொலிசார் மீண்டும் இந்த வழக்கு தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.