56 ஆண்டுகளுக்கு பிறகு விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் கண்டுபிடிப்பு
விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலானது 56 ஆண்டுகளுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் மகிழ்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ வீரரின் உடல் கண்டுபிடிப்பு
இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசம், ரோதங் கணவாய் பகுதியில் அடல் பிஹாரி வாஜ்பாய் மலையேற்ற பயிற்சி மைய வீரர்கள் கடந்த 2003 -ம் ஆண்டு பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் விமானத்தின் உடைந்த பாகங்களை கண்டெடுத்தனர்.
பின்னர், அந்த விமான பாகமானது கடந்த 1968 -ம் ஆண்டில் விபத்துக்குள்ளான விமான படையின் ஏஎன்12 ரக போக்குவரத்து விமானம் என்று உறுதி செய்யப்பட்டது. அந்த விபத்தின் போது அதில் பயணம் செய்த 102 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இதன்பின்னர், கடந்த 2005, 2006, 2013 மற்றும் 2019 -ம் ஆண்டுகளில் இந்திய ராணுவத்தின் டோக்ரா ஸ்கவுட் குழுவினர் விமானத்தை தேடும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இப்பகுதியில் மீண்டும் அவர்கள் தேடிய போது 4 வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், ஒரு ராணுவ வீரரின் உடலானது தாமஸ் செரியனின் உடல் என்று கண்டறிந்தனர்.
பின்பு, கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த செய்தியை கேட்ட தாமஸ் செரியனின் குடும்பத்தினர் மகிழ்ச்சி கலந்த சோகத்துக்கு தள்ளப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாமஸ் செரியனின் சகோதரி கூறுகையில், "எனது சகோதரரின் உடல் கிடைத்தது மகிழ்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியது. எனது சகோதரருக்கு முறையாக இறுதிச்சடங்கு செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. கடவுளின் ஆசீர்வாதமாக நினைக்கிறோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |