பிரான்சில் 3 மாதங்களாக மாயமான பெண்: கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட சடலம்
பிரான்சில் மூன்று மாதங்களாக தேடப்பட்டு வந்த பெண் ஒருவரின் சடலம், குடியிருப்பு ஒன்றில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மான்ட்பெல்லியர் அருகே பிரெஞ்சு கடலோர நகரமான Sète-வைச் சேர்ந்த 38 வயதான ஆரெலி வாகியர் என்பவர் கடந்த ஜனவரி 28 முதல் மாயமானார்.
தற்போது, நீண்ட 3 மாதங்களுக்கு பின்னர், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பெடரியக்ஸ் கிராமத்தில் குடியிருப்பு ஒன்றில், கான்கிரீட் பலகையின் கீழ் வாகியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அதே குடியிருப்பிலேயே வாகியரின் காதலரும் குடியிருந்து வருகிறார். வாகியரின் சடலத்தை உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாகியரின் காதலரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
எங்கேயாவது, தொடர்பு கொள்ள முடியாத தொலைவில் வாகியர் உயிருடன் இருக்கிறார் என்றே தாம் நம்பியதாக கூறும் அவரது சகோதரர், தற்போது தெரிய வந்திருக்கும் இந்த தகவல் அதிர்ச்சியையும் அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில், முழு ஒத்துழைப்பும் வழங்க இருப்பதாகவும் அவர் பொலிசாருக்கு உறுதி அளித்துள்ளார்.
ஆரெலி வாகியர் மாயமானது தொடர்பில் அவரது காதலர் பிப்ரவரி 15ம் திகதியே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். மட்டுமின்றி, வாகியரின் சகோதரருக்கும் இது தொடர்பில் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆரெலி வாகியர் அனுப்பியதாக கூறப்படும் குறுந்தகவல் ஒன்று, மொத்தமும் எழுத்துப்பிழையுடன் இருந்ததாக அவரது சகோதரர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
தமது சகோதரி அப்படியான நபர் அல்ல எனவும், அவர் வார்த்தைகளை மிகவும் நேசிக்கக்கூடியவர் எனவும் அவரது சகோதரர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.