பிரித்தானியாவில் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள்: வரவழைக்கப்பட்ட வெடிபொருள் நிபுணர் குழு
பிரித்தானியாவில் அண்டை வீட்டுக்காரர்கள் இடையே வெடித்த மோதலின் தொடர்ச்சியாக அப்பகுதிக்கு வெடிபொருள் செயலிழப்பு குழு வரவழைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை வீட்டுக்காரர்கள் இடையே மோதல்
பிரித்தானியாவின் எசெக்ஸ்(Essex) மாகாணத்தில் உள்ள பிரென்ட்வுட்டில்(Brentwood) சாயர்ஸ் குரோவ்(Sawyers Grove) பகுதியில் உள்ள அண்டை வீட்டாருக்கு இடையே மோதல் வெடித்தது.
இந்த சம்பவத்தை அடுத்து வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு மோதல் காரணமாக வீடு ஒன்றின் கதவு சேதமடைந்து இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பூட்டியிருந்த அந்த வீட்டின் உள்ளே சென்று சோதனையிட்ட போது அச்சமூட்டும் வகையிலான சில பொருட்களை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வீட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் என்னவென்று ஆய்வு செய்வதற்காக வெடிபொருள் செயலிழப்பு குழுவினர் மற்றும் பிற துறை சார்ந்த நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
ஆண், பெண் ஆகிய இருவர் கைது
இந்த சம்பவத்தில் தகராறில் ஈடுபட்ட ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வீட்டில் இருந்த சந்தேகப் பொருள் என்னவென்று ஆய்வு செய்து உறுதிப்படுத்தும் வரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்த 40 வீடுகள் காவல்துறையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் ஏராளமான வீடுகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர்.