அகதிகள் தங்கியிருக்கும் ஹொட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பிரித்தானியாவில் பரபரப்பு
பிரித்தானியாவில் ஆப்கன் அகதிகள் தங்கியிருக்கும் ஹொட்டல் ஒன்றுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காலை 10.15 மணியளவில், Scarboroughவில் அமைந்துள்ள Grand Hotel என்னும் ஹொட்டலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், ஹொட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக ஹொட்டல் ஊழியர்கள் பொலிசாருக்கு தகவலளித்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த பொலிசார் அந்த ஹொட்டல் மற்றும் அதற்கு அருகிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த அனைவரையும், அங்கு பணிபுரிந்த ஊழியர்களையும் வெளியேற்றியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டு நிபுணர்கள் அந்த கட்டிடத்தை சோதனையிட்டு அங்கு வெடிகுண்டு அபாயம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தபின்பு, அந்த கட்டிடங்களில் தங்கியிருந்தவர்கள் மீண்டும் தங்கள் அறைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.
விடயம் என்னவென்றால், அந்த விடுதியில் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த 150 அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இது உள்ளூர் மக்களுக்குப் பிடிக்கவில்லை.
ஆகவே, கோபமடைந்த அவர்கள் அகதிகளுக்கெதிரான கைப்பிரதிகளை அங்கிருக்கும் வீடுகள் அனைத்திற்கும் அனுப்பியுள்ளார்கள். அத்துடன், நேற்று அதிகாலை அப்பகுதியிலுள்ள வீடுகள் முன் ’ஆப்கன் அகதிகள் வேண்டாம்’ என்று கூறும் கைப்பிரதிகள் வீசப்பட்டுள்ளன.
இந்நிலையில், அந்த ஹொட்டலுக்கு வந்த தொலைபேசி அழைப்பு, வெறும் மிரட்டல் என தெரியவந்துள்ளது. அது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.