இலங்கையில் இருந்து அடிபட்டு அகதியாக வந்தபோது.. எப்படியாவது என்னை காப்பாத்துங்க.. கதறும் பிரபல தமிழ் நடிகர்
அண்ணன் போண்டா மணிக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டது, அவருக்கு உதவுங்கள் என நடிகர் பெஞ்சமின் கண்ணீர்
என் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும், அதற்கு நான் நன்றாக இருக்க வேண்டும் - போண்டா மணி
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி தன்னை காப்பாற்றுமாறு உதவி கேட்டுள்ளார். தமிழில் வடிவேலு, விவேக் ஆகியோருடன் இணைந்து நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் போண்டா மணி(59).
இலங்கையைச் சேர்ந்த போண்டா மணி 270 படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சிகிச்சைக்காக பணம் தேவைப்படுவதால் தன்னை காப்பாற்றுமாறு ஊடகத்தின் வாயிலாக உதவி கேட்டுள்ளார். ஊடகத்திடம் அவர் கூறுகையில், 'நான் சினிமாவில் பணத்தை சம்பாதிக்கவில்லை, பெயரையும் புகழையும் தான் சம்பாதித்தேன். இலங்கையில் இருந்து அடிபட்டு அகதியாக வந்தபோது ஒரு ரூபாய் கூட கையில் இல்லை. அதே நிலைமை தான் இன்றைக்கும்.
இந்த நிலைமை வரும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. கடவுள் இப்படி ஒரு சோதனையை கொடுத்துவிட்டார். என் மனைவி ஒரு மாற்றுத்திறனாளி. அவர் என்னை நம்பி வந்தவர். என் மகள் 12ஆம் வகுப்பும், மகன் 10ஆம் வகுப்பும் படிக்கின்றனர். அவர்களை கரை சேர்ப்பதற்குள் இந்த நிலைமை வந்துவிட்டதே என்று நினைக்கும்போது தான் வேதனையாக உள்ளது' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது உடல்நலம் குறித்து கூறுகையில், 'இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டது என்று கூறுகிறார்கள். சாக்கடையில் விழுவது போன்ற காட்சி ஒன்றில் நடித்தேன். அந்த சாக்கடை தண்ணீர் நுரையீரலை பாதித்தது. அப்போது நான் சரியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை. அதிலிருந்து தான் இந்த பிரச்சனை ஆரம்பித்தது. ஏற்கனவே எனக்கு சர்க்கரை வியாதியும் இருந்ததால் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது.
இரவு பகல் பாராமல் வேலை செய்ததால் தூக்கத்தை இழந்தேன். அதுதான் இந்த நிலைமைக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மக்களுக்காக என் உடலை வருத்திக் கொண்டேன். நடிகர்கள் சிலர் எனக்கு உதவி செய்தனர்' என தெரிவித்துள்ளார்.
தனக்கு மருத்துவ உதவி தேவை என்றும், யாராவது முன் வந்தால் வேண்டாம் என்று கூறும் அளவுக்கு தன் நிலைமை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.