மயில்சாமி ஒரு குட்டி எம்.ஜி.ஆர்! என் ஆப்ரேஷனுக்கு லட்சம் ரூபாய் கொடுத்த புண்ணியவான்..கதறி அழுத நடிகர் போண்டா மணி
தனக்கு அறுவை சிகிச்சை செய்ய ஒரு லட்சம் கொடுத்த மயில்சாமி இப்போது உயிருடன் இல்லையே என நடிகர் போண்டா மணி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
57 வயதில் மரணம்
பிரபல தமிழ் நடிகர் மயில்சாமியின் (57) மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு பிரபலங்கள் அவருக்கு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதேபோல் மயில்சாமியின் உதவும் மனப்பான்மை குறித்து அவருடன் பணியாற்றிய கலைஞர்கள் மனம்திறந்துள்ளனர்.
கதறி அழுத போண்டா மணி
அந்த வகையில் மயில்சாமி தனக்கு உதவி செய்தது குறித்து நகைச்சுவை நடிகர் போண்டா மணி கூறுகையில், 'மயில்சாமி ஒரு குட்டி எம்.ஜி.ஆர், கொடை வள்ளல். நம்மை எல்லாம் விட்டு சென்றுவிட்டார். நான் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, ஓடி வந்து ஒரு லட்சம் ரூபாயை கையில் கொடுத்தார். அத்துடன் எல்லாரிடம் பணத்தை பெற்று வந்திருக்கேன், கவலைப்படாதே உனது அறுவை சிகிச்சைக்கு நான் பொறுப்பு என்று கூறினார்.
அடுத்த வாரம் எனக்கு ஆப்ரேஷன், அதற்குள் அந்த புண்ணியவான் நம் எல்லோரையும் விட்டு சென்றுவிட்டார். அவரது ஆத்மா சாந்தியடையனும். இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. இந்த மாதிரி ஒரு கொடை வள்ளலை சினிமாவில் பார்ப்பது ரொம்ப கஷ்டம். நான் எத்தனையோ கலைஞர்களை பார்த்திருக்கிறேன், ஆனால் மயில்சாமி போன்று ஒரு கலைஞரை பார்த்ததில்லை' என்று கண்ணீருடன் தெரிவித்தார்.