மில்லியன் கணக்கிலான பிரித்தானியர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி... எப்போது முதல்? வெளியான தகவல்
கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக விடுதலை பெறும் நோக்கில் பிரித்தானியாவில் முதியோர்களுக்கும் இக்கட்டான நிலையில் இருப்பவர்களுக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த மூன்றாவது டோஸ் தடுப்பூசிக்கான நடவடிக்கைகள் தொடங்கும் என புதிய சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
70 வயதுக்கு மேற்பட்ட பிரித்தானியர்களுக்கு முதற்கட்டமாக பூஸ்டர் என அழைக்கப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட உள்ளது.
தடுப்பூசியால் கிடைக்கப்பெற்ற பாதுகாப்பானது 6 மாதங்களில் சரிவடையத் தொடங்கும் என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ள நிலையில், எதிர்வரும் செப்டம்பர் முதல் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
மேலும், இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் முன்களப் பணியாளர்களுக்கும், சமூக தொண்டாற்றும் ஊழியர்களுக்கும் முதியோர் காப்பகங்களில் வசிப்போருக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது கட்டமாக, 50 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் மூன்றாவது டோஸ் தடுப்பூசிக்காக அழைக்கப்படுவார்கள்.
இரண்டு டோஸ் தடுப்பூசிகளால் நாம் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்பட்டோம், அந்த பாதுகாப்பை மூன்றாவது டோஸ் போட்டுக்கொள்வதன் மூலம் உறுதி செய்வோம் என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆண்டு தோறும் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்று, இந்த செப்டம்பர் மாதம் பூஸ்டர் தடுப்பூசியும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.