திடீரென்று அவசர கோப்ரா கூட்டத்தை கூட்டும் பிரதமர் போரிஸ் ஜோன்சன்: வெளிவரும் பின்னணி
ஆப்கானிஸ்தானில் சீரழிந்து வரும் நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் போரிஸ் ஜோன்சன் அவசர கோப்ரா கூட்டத்தை கூட்டவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான் ஆதிக்கம் சமீப நாட்களாக ஓங்கி வருகிறது.
பல முக்கிய நகரங்களை வரிசையாக கைப்பற்றி வருவது மட்டுமின்றி, தாலிபான் அமைப்பின் அச்சுறுத்தல் காரணமாக பல ஆயிரம் மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறியும் வருகின்றனர்.
நீண்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் படைகள் வெளியேறியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கம் இதே நிலையில் நீடிக்கும் என்றால், அடுத்த சில வாரங்களில் தலைநகர் காபூல் வீழும் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் அவசர கோப்ரா கூட்டத்தை கூட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மேலதிக தகவல் ஏதும் இது தொடர்பில் வெளியாகவில்லை.
ஆனால் மேற்கத்திய நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அல் கொய்தாவுக்கு ஆப்கானிஸ்தான் பாதுகாப்பான புகலிடமாக மாறினால் பிரித்தானிய படைகள் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பும் நிலை ஏற்படும் என முன்னதாக பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, நேற்றைய தினம் பிரித்தானியா பிரஜைகளை வெளியேற்றுவதற்காகவும், ஆப்கானிஸ்தான் முன்னாள் பணியாளர்களின் இடமாற்றத்திற்கு ஆதரவளிப்பதற்காகவும் 600 துருப்புக்களை நியமிக்க இருப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.