ஆப்கானிஸ்தான் "பயங்கரவாதத்தின் தாயகமாக" மாற விடக்கூடாது - பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வேண்டுகோள்
ஆப்கானிஸ்தான் "பயங்கரவாதத்தின் தாயகமாக" மாறாமல் இருக்க மேற்கு நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தாலிபான்கள் தலைநகர் காபூலுக்குள் நுழைந்த பிறகு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியும் தஜிகிஸ்தானுக்கு நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, தாலிபான் அதிகாரிகள் விரைவில் அந்நாட்டை 'ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்' (Islamic Emirate of Afghanistan) என அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவசர கோப்ரா கூட்டத்திற்குப் பிறகு பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆப்கானிஸ்தானில் நிலைமை "மிகவும் மோசமாக" இருப்பதாக விவரித்தார்.
எந்தவொரு புதிய ஆப்கானிய அரசாங்கமும் உடன்பாடு இல்லாமல் அங்கீகரிக்கப்படமாட்டாது என்பதை உறுதி செய்ய, "ஒத்த எண்ணம் கொண்ட" சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
ஜான்சன் மேலும் கூறியதாவது, "ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதத்தின் தாயகமாக மாறிவிடக்கூடாது, அதற்கு மேற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் முக்கியம்" என்றார்.
மேலும், நிலைமை குறித்து விவாதிக்க பிரித்தானியாவில் மீண்டும் புதன்கிழமை பாராளுமன்றம் ஒன்றுகூடும் என்று கூறினார்.
இதற்கிடையில், காபூலில் உள்ள பிரித்தானிய தூதர் ஆப்கானிஸ்தானில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய "24 மணி நேரமும் வேலை செய்கிறார்" என்று ஜான்சன் கூறினார்.