காபூல் தாலிபான்களிடம் சிக்க காரணமே அவர்கள் தான்: பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய போரிஸ் ஜோன்சன்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்ற காரணமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நடவடிக்கைகள் இருந்துள்ளது என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
போர் சூழல் மிகுந்த ஆப்கான் நாட்டில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேற ஜனாதிபதி பைடன் முன்னெடுத்துள்ள முடிவுகளே இந்த குழப்பங்களுக்கு காரணம் என போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தொடர்பில் அவசர கோப்ரா கூட்டத்திற்கு பிறகு பேசிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், அமெரிக்காவின் முடிவு தற்போதைய ஆப்கானிஸ்தான் நிலைக்கு காரணமாக இருந்தாலும், இது பல வழிகளில் முன்னறிவிக்கப்பட்ட ஒரு நிகழ்வின் தொடர்ச்சி என்றே குறிப்பிட்டுள்ளார்.
இந்த கட்டத்தில் மேற்கத்திய நாடுகள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் முன்வைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில், தாலிபான்கள் கை ஓங்கும் நிலை ஏற்படலாம் என்பதை பல முறை தாம் எச்சரித்துள்ளதாக குறிப்பிட்ட போரிஸ் ஜோன்சன், அடுத்து ஆப்கானிஸ்தானில் எந்த மாதிரியான ஆட்சி அமையவிருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார்.