விமானத்தில் சக பயணிகளால் கேலி கிண்டலுக்கு இலக்கான போரிஸ் ஜோன்சன்: பிரதமராக எதிர்ப்பு
முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இருவரும் முந்துவதாக தகவல்
போரிஸ் ஜோன்சன் மீண்டும் போட்டியிடுவதை கேலி செய்ததாகவும், வேண்டாம் விட்டுவிடுங்கள் என கத்தியதாகவும் தகவல்
மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கரீபியன் தீவுகளில் விடுமுறையை கொண்டாடிவிட்டு திரும்பிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சனை சக பயணிகள் கிண்டல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமரான போரிஸ் ஜோன்சன் தமது மனைவியுடன் கரீபியன் தீவு ஒன்றில் விடுமுறையை கழித்துவிட்டு இன்று நாடு திரும்பியுள்ளார். பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவி விலகிய நிலையில், கட்சியின் அடுத்த வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு தற்போது முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஆகிய இருவரும் முந்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
@getty
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கட்சியின் விதிகளுக்கு உட்பட்டு 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பதாக ரிஷி சுனக் தரப்பு அறிவித்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெறும் 46 உறுப்பினர்கள் ஆதரவு மட்டும் பெற்றிருந்த போரிஸ் ஜோன்சன் தற்போது 100 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், ரிஷி சுனக் தரப்பின் கை ஓங்கியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மொத்தம் 115 உறுப்பினர்கள் ரிஷி சுனக் பிரதமராக வேண்டும் என வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சனிக்கிழமை பகல் 10 மணியளவில் போரிஸ் ஜோன்சன் நாடு திரும்பியுள்ளார். விமானத்தில் வைத்தே சக பயணிகள் போரிஸ் ஜோன்சன் மீண்டும் போட்டியிடுவதை கேலி செய்ததாகவும், வேண்டாம் விட்டுவிடுங்கள் என கத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
@PA
மட்டுமின்றி, போரிஸ் ஜோன்சனின் முன்னாள் துணை பிரதமர் டொமினிக் ராப் கூட, போட்டியிட வேண்டாம் என போரிஸ் ஜோன்சனிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. போரிஸ் ஜோன்சன் தமது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இரண்டு வாரங்கள் டொமினிகன் குடியரசில் விடுமுறையை கழித்துள்ளார்.
6 வாரங்கள் முன்னர் ஜோன்சன் பிரதமர் பதவியில் இருந்து விலக, பின்னர் லிஸ் ட்ரஸ் பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் அவரும் 44 நாட்களில் பதவி விலக, தற்போது மீண்டும் போரிஸ் ஜோன்சன் பிரதமர் பதவிக்கு குறிவைத்து களமிறங்கியுள்ளார்.
இருப்பினும், பிரித்தானிய சந்தை நம்பிக்கை வைத்திருக்கும், பொருளாதாரம் தொடர்பில் முன் அனுபவம் கொண்ட ரிஷி சுனக் ஆட்சிக்கு வர வேண்டும் என்றே தற்போது சொந்த கட்சி உறுப்பினர்களும் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.