மகளின் பெயரை வெளியிட்ட போரிஸ் ஜான்சன்-கேரி தம்பதி! வைரலாகும் புகைப்படம்
பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி தம்பதியினர் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையின் பெயரை இன்று வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது மனைவி கேரி ஜான்சன் தங்கள் பெண் குழந்தைக்கு ரோமி ஐரிஸ் சார்லோட் ஜான்சன் (Romy Iris Charlotte Johnson) என்று பெயரிட்டுள்ளனர்.
கேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரோமி என்ற பெயர் அவரது அத்தை ரோஸ்மேரியின் பெயரால் வந்தது, அதே நேரத்தில் ஐரிஸ் கிரேக்க மொழியில் இருந்து வந்தது என்றும், சார்லோட் என்பது போரிஸ் ஜான்சனின் தாயாரின் பெயரில் இருந்து வந்தது என்றும் பதிவிட்டுள்ளார். கிரேக்க மொழியில் ஐரிஸ் என்பது வானவில் என பொருள்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் காலமான பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் Charlotte Johnson Wahl-க்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் தனது மகளுக்கு சார்லோட் என பெயரிட்டதாக கூறப்படுகிறது.
இந்த பெயர் அறிவிப்புடன், கேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குழந்தை ரோமியின் புகைப்படத்தை வெளியிட்டார்.
கிறிஸ்துமஸ் மரத்தின் அருகே தொட்டிலில் இருக்கும் குழந்தை ரோமி படுத்திருக்க, அருகில் ஜான்சன்-கேரியின் மகன் Wilfred Lawrie Nicholas Johnson நிற்கும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.