கையும் களவுமாக சிக்கினார் போரிஸ் ஜான்சன்: பிரதமர் இல்ல பார்ட்டி புகைப்படங்களை வெளியிட்டார் விசாரணை அதிகாரி
கொரோனா காலகட்டத்தில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என பொதுமுடக்கம் அறிவித்துவிட்டு, பிரதமர் இல்லத்தில் பல மதுபான பார்ட்டிகள் நடந்ததாக வெளியான தகவலால் பிரித்தானிய நாடாளுமன்றமே குலுங்கியது.
அது தொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில், தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார் அந்த விசாரணையை மேற்கொண்டு வந்த சிவில் அதிகாரியான Sue Gray என்ற பெண்மணி.
பிரதமர் இல்லம் மற்று ம் அரசு அலுவலகங்களில் பொதுமுடக்கத்தின்போது விதிகளை மீறி அரசியல்வாதிகள் முதலானோர் மதுபான பார்ட்டிகள் நடத்தியது உண்மைதான் என அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு ஆதாரமாக அவர் ஒன்பது புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அவற்றில், பிரதமர் போரிஸ் ஜான்சன், அவருடைய மனைவி கேரி, நிதியமைச்சர் ரிஷி சுனக் முதலானோர் இடம்பெற்றுள்ளார்கள்
.
ஒரு புகைப்படத்தில், கையில் மதுபானக் கோப்பையுடன் போரிஸ் ஜான்சன் நிற்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
தனது அறிக்கையின் முடிவுரையாக, அரசியல் மற்றும் அரசில், மத்தியில் செயல்படும் மூத்த தலைமை, இந்த (மதுபான பார்ட்டி) கலாச்சாரத்துக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்று கூறியுள்ள Sue Gray, இந்த பார்ட்டிகளின் ஆரம்ப நோக்கம் என்னவாக இருந்தாலும், இந்த கூடுகைகள் பலவற்றில் நிகழ்ந்தது, அந்த நேரத்தில் கொரோனா விதிகளை மதித்து நடந்த செயல் அல்ல என்றும் கூறியுள்ளார்.
இந்த பிரச்சினை போரிஸ் ஜான்சனுடைய அரசியல் வாழ்க்கையையே ஆட்டம் காணச் செய்யும் ஒரு பிரச்சினை என்றாலும் அதை சமாளிக்க அவரிடம் ஒரு வலிமையான ஆயுதம் உள்ளது. அது, மன்னிப்பு!
அதாவது, அவர் நாடாளுமன்றத்திலும், பொதுமக்களிடமும், தன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், நடந்த தவறுக்கு தன்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது!