புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வேட்டு... பிரித்தானிய பிரதமர் சூசகம்
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஊரடங்கு உட்பட எந்த விதிகளும் அமுலுக்கு வராது என பிரதமர் போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.
கடும் குழப்பம் மற்றும் அமைச்சரவையின் பின்னடைவுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் அமுலுக்கு வராது என பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
ஆனால், ஓமிக்ரான் பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றால், அடுத்தகட்ட நடவடிக்கை கட்டாயம் இருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால், கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிப்பதாக பதிவானால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர் ஊரடங்கு நடவடிக்கைக்கள் முன்னெடுக்க அதிக வாய்ப்பிருப்பதாகவே தெரியவந்துள்ளது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதுவும் கண்டிப்பாக முன்னெடுக்கப்படாது என்றே தெரியவந்துள்ளது.
தற்போதைய நிலையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 90% மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே என தெரியவந்துள்ளது.
நேற்றைய நாளில் 90,629 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 172 பேர்கள் மரணமடைந்துள்ளனர். ஆனால், எதிர்வரும் வாரங்களில் பிரித்தானிய மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றே பிரதமர் அலுவலகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முன்னர் மருத்துவமனைகளில் இருந்து தரவுகளை திரட்டும் பணியில் பிரதமர் அலுவலகம் முனைப்பு காட்டுவதாக தெரியவந்துள்ளது.
டிசம்பர் 28ம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூட உள்ளது. அப்போது புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கலாம் எனவும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.