சர்ச்சையை உடைக்க அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட போரிஸ் ஜான்சன்!
பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கோடிக்கணக்கான பிரித்தானியர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
56 வயதாகும் போரிஸ் ஜான்சன் மத்திய லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் முதன் டோஸை வெள்ளிக்கிழமை செலுத்திக்கொண்டார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தபோது, இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு தடுப்பூசியை பெற்றுள்ளார்.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகாவுக்கு எதிராக நிலவும் சர்ச்சைகளுக்கு மத்தியில் தடுப்பூசியை பெற்றதும் அவர் தனது இரு கைகளையும் உயர்த்தி Thumbs Up காட்டினார்.
பிரித்தானியாவில் தற்போது 26.2 மில்லியன் மக்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இது அந்நாட்டில் உள்ள பெரியவர்களின் எண்ணிக்கையில் பாதி ஆகும். மேலும் 2 மில்லியன் மக்கள் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இரத்தம் உறையும் அபாயம் இருப்பதாக எழுந்த சலசலப்புக்கு மத்தியில் பல ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தடை செய்துவந்தது.
ஆனால், உலக சுகாதார அமைப்பு மற்றும் பிரித்தானியாவின் சுகாதார கண்காணிப்புக் குழுவை தொடர்ந்து European Medicines Agency-யும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பாதுகாப்பானது என்று தீர்ப்பளித்த பிறகு ஜேர்மனி, பிரான்ஸ் உட்பட கிட்டத்தட்ட தடை விதித்த அனைத்து நாடுகளும் தங்கள் முடிவை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளனர்.

