போரிஸ் ஜான்சன்: பிரிட்டன் பிரதமரை பதவி விலக வைத்த 5 காரணிகள்
மூன்று வருடங்களுக்கு முன்புதான் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சியை 1987ஆம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றிக்கு அழைத்து சென்றார்.
ஆனால் இப்போது பிரட்டன் பிரதமர் தனது சொந்த எம்.பிக்கள் பலரின் ஆதரவை இழந்து, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிலிருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதிய கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தான் பிரதமர் பதவியில் நீடிக்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதற்கான ஐந்து காரணங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
கிரிஸ் பிஞ்சர் விவகாரம்
ஜூன் 29ஆம் தேதியன்று முன்னாள் துணை தலைமை கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினரருமான கிறிஸ் பிஞ்சர் தனியார் கிளப் ஒன்றிற்கு சென்றுள்ளார். அவரின் கூற்றுப்படி 'அவர் அளவுக்கு அதிகமாக குடித்து வெட்கப்படியான சூழலுக்கு தன்னைத்தானே அழைத்து சென்றார்.'
இரண்டு ஆண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதன்பின் பல வருடங்களுக்கு முந்தைய குற்றச்சாட்டுகளும் அடுக்கடுக்காக வெளியே வந்தன. இதனால் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் பிரதமரின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.
பிப்ரவரி மாதம் கிறிஸ் பிஞ்சரை துணை தலைமை கொறடாவாக நியமிக்கும்போது போரிஸ் ஜான்சனுக்கு அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிந்திருக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. ஆனால் இது சரியான கூற்று இல்லை என்ற போதும் அமைச்சர்களும் இதை மீண்டும் வலியுறுத்தினர்.
ஜூலை 4ஆம் தேதி ஜான்சனுக்கு பிஞ்சர் மீதான அதிகாரப்பூர்வ புகார் குறித்து தெரிந்திருந்தது என பிபிசி செய்தி வெளியிட்டது. அடுத்த நாள் முன்னாள் அரசு ஊழியர் ஒருவர், போரிஸ் ஜான்சனுக்கு இந்த புகார் குறித்து நேரடியாக தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
அதன்பின் பிஞ்சர் குறித்து தனக்கு 2019ஆம் ஆண்டே தெரியும் என்றும், பிஞ்சரின் நியமனத்திற்கு தான் மன்னிப்பு கோருவதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
பொதுமுடக்க விதிமீறல்கள்
2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது பிறந்தநாள் நிகழ்வில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுவதற்காக முதல் முறையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது பார்ட்டி ஒன்றுக்கு சென்றது குறித்து பின்னர் மன்னிப்பு கோரினார் போரிஸ் ஜான்சன்.
மேலும், பிரதமர் அலுவலகம் மற்றும் ஒயிட் ஹாலில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 83 பேருக்கு 126 விதமான அபராதங்களை காவல்துறையினர் விதித்தனர்.
அதேபோல அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்த நிகழ்வுகளில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக அபராதங்கள் விதிக்கப்பட்டன என மூத்த அரசு ஊழியர் சூ க்ரே அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்
மூத்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் அலுவலகத்தில் அனைத்து விதிகளும் கடைப்பிடிக்கப்படுவதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார். இப்போது அவர் கூறியதில் உள்ள உண்மைத் தன்மை குறித்து நாடாளுமன்ற கீழவை குழுவால் அவர் விசாரிக்கப்படவுள்ளார்.
வரி உயர்வும், வாழ்கை செலவுகளும்
பிரிட்டனில் 2022ஆம் ஆண்டு பணவீக்கம் மேலும் அதிகரித்தது. தற்போது 9.1 சதவீத பணவீக்கம் நிலவுகிறது.
இதற்கான பல காரணங்கள் போரிஸ் ஜான்சனின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை.
எடுத்துக்காட்டாக ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுத்திருப்பதால் எண்ணெய் விலையும், உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இதற்கு அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்தது. ஒரு லிட்டர் எரிபொருளுக்கான வரியை 5 பென்ஸ் வரை குறைத்தது. அதேபோல ஏப்ரல் மாதம் வரியை உயர்த்தியது. தேசிய காப்பீட்டிற்காக செலுத்த வேண்டிய தொகையை அதிகரித்தது. இதனால் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மீதான பாரம் குறையும் என அரசு தெரிவித்தது.
34 ஆயிரம் பவுண்டிற்கு மேல் சம்பாதிக்கும் ஒருவர் அதிகமாக வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
வாழ்க்கை செலவுகள் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் இந்த வேளையில் வரியை உயர்த்தி உழைக்கும் மக்களை மேலும் இந்த அரசு சிரமப்படுத்துகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
ஓவன் பேட்டர்சன் விவகாரம்
2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போது கன்சர்வேடிவ் கட்சி எம்.பியாக இருந்த ஓவன் பீட்டர்சனை 30 நாட்களுக்கு பதவியிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற கமிட்டி தெரிவித்திருந்தது.
ஓவன் பீட்டர்சன் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவற்றிக்கு சலுகைகளை அளிக்க முயற்சித்ததாக அந்த கமிட்டி தெரிவித்திருந்தது.
ஆனால் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியினர் அவரின் இடைநீக்கத்திற்கு எதிராக வாக்களித்தனர். அவர் மீதான விசாரணை எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்பதை கண்காணிக்கவும் புதிய கமிட்டி ஒன்றை நியமித்தனர்.
அதன்பின் பெரும் எதிர்ப்புகளுக்கு பிறகு பேட்டர்சன் பதவி விலகிறார். இந்த விவகாரத்தை தான் சரியாக கையாளவில்லை என போரிஸ் ஜான்சன் பின்னர் ஒப்புக் கொண்டார்.
பிரெக்ஸிட் குறித்து எந்த திட்டமும் இல்லை
பிரெக்ஸிட்டை நிகழ்த்தி காட்டுவோம் என்ற தெளிவான கொள்கையை முன்னிறுத்தி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமரானவர் போரிஸ் ஜான்சன்.
ஆனால் அப்போதிலிருந்து பிரதமர் அலுவலகத்தில் பிரெக்ஸிட் குறித்த தெளிவும், திட்டங்களும் இல்லை என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
போரிஸ் ஜான்சன் தெளிவில்லாமல் செயல்படுவதாக அவரின் முன்னாள் ஆலோசகரான டோமினிக் க்யூமிங்ஸ் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
கன்சர்வேடிவ் எம்.பியான ஜெரிமி ஹண்ட், போரிஸ் ஜான்சன் தொலைநோக்கு பார்வையும், திறனும் இல்லாமல் செயல்படுவதாக தெரிவித்தார்.
அதேபோல இடைத்தேர்தல்களில் கன்சர்வேடிவ் கட்சியினர் தொடர் தோல்வியை சந்தித்து வந்தனர். இதனால் உளவியல் ரீதியான மாற்றத்திற்கு தான் ஆளாகப் போவதில்லை என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.
இப்போது கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.