பிரான்சுடனான மோதல் முற்றியது... போர்க்கப்பல்களை அனுப்பினார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரெக்சிட்டால் ஏற்பட்ட மீன் பிடித்தல் பிரச்சினையால் பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்குமிடையிலான உரசல் முற்றியுள்ளது.
பிரெக்சிட்டுக்குப் பின், தங்கள் கடல் பகுதியில் மற்ற நாட்டு மீனவர்கள் மீன் பிடிப்பதை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயன்று வருகிறது பிரித்தானியா. அதன்படி, குறிப்பிட்ட அளவு பிரெஞ்சு மீன் பிடி படகுகள் மட்டுமே பிரித்தானிய கடல் பரப்பில் அனுமதிக்கப்படுகின்றன.
அத்துடன், புதிதாக சில கட்டுப்பாடுகளையும் பிரித்தானியா விதித்துள்ளது. பிரித்தானியா விதித்துள்ள அந்த புதிய கட்டுப்பாடுகள், எங்கெல்லாம் பிரான்ஸ் மீன் பிடிப் படகுகள் செல்லலாம், எங்கு செல்லக்கூடாது, கடலில் எத்தனை நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்கலாம், அவர்கள் படகுகளில் என்னென்ன இயந்திரங்கள் வைத்திருக்கலாம் என்பது குறித்தெல்லாம் தெரிவிக்கின்றன.
ஆனால், பிரெக்சிட்டுக்குப் பின் எந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படாலும், அவை ஐரோப்பிய ஒன்றியம் வழியாக வந்தால் மட்டுமே அவற்றை ஏற்றுக்கொள்வோம் என பிரான்ஸ் கூறிவிட்டது. குறிப்பாக ஜெர்சி என்னும் தீவுப்பகுதியில் மீன் பிடிப்பதில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜெர்சி தீவுக்கு பிரான்சிலிருந்துதான் மின்சாரம் செல்கிறது. கடலுக்கடியில் பதிக்கப்பட்ட கேபிள்கள் மூலம் அத்தீவுக்கு மின்சாரம் செல்லும் நிலையில், மீன் பிடிப்பதில் பிரச்சினை செய்தால், பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, அந்த மின்சார கேபிள்களை துண்டித்து ஜெர்சி தீவுக்கு மின்சாரம் கிடைக்காமல் செய்துவிடுவோம் என எச்சரித்தார் பிரான்ஸ் கடல்வளத்துறை அமைச்சரான Annick Girardin.
மேலும், ஜெர்சி தீவிலுள்ள துறைமுகம் ஒன்றை, பிரான்சுக்கு சொந்தமான 100 மீன் பிடி படகுகள் இன்று காலை சுற்றி வளைக்க இருப்பதாக பிரித்தானிய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆகவே, இனிமேலும் பிரான்சின் மிரட்டல்களைக் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க முடியாது என முடிவு செய்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
அதன்படி, அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு இரண்டு பிரித்தானிய போர்க்கப்பல்கள் ஜெர்சி தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளுடன் களமிறங்கியுள்ள HMS Severn மறும் HMS Tamar என்னும் அந்த போர்க்கப்பல்கள் இரண்டும் பிரித்தானிய கடல் பரப்பில் ரோந்து செல்ல உள்ளன.