பிரித்தானியா எப்போது சகஜ நிலைக்குத் திரும்பும்?: போரிஸ் ஜான்சன் சூசக தகவல்
பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் 6 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், Omicron அலையின் வேகம் குறையத் தொடங்கிவிட்டதாக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, பிரித்தானிய பிரதமர் சூசகமாக தெரிவித்துள்ள தகவல்களிலிருந்து, இன்னும் சில வாரங்களில் பிளான் B கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படலாம் என தெரியவந்துள்ளது.
போரிஸ் ஜான்சனின் கூற்றுப்படி, பிப்ரவரியில் பிரித்தானியா சகஜ நிலைக்குத் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி, பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் வீத அதிகரிப்பு குறைவாகவே இருந்தாலும், 60 வயதுக்கு மேற்பட்ட எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் மத்தியில், குறிப்பாக Omicron மையமாக மாறியுள்ள லண்டனில் தொற்று வீதம் அதிகரித்துக்கொண்டேதான் உள்ளது.
ஆனாலும், அந்த நிலையும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் மாறிவிடும், அதாவது கொரோனா நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். இன்னொரு பக்கம், லண்டனில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது.
இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், சமீபத்தைய தரவுகளின் அடிப்படையில், மேலும் மூன்று வாரங்களுக்கு பிளான் Bயைத் தொடர்வதற்கு கேபினட் ஒப்புதலளித்துள்ளதாகவும், தற்போதைய கட்டுப்பாடுகள் இம்மாதம் (ஜனவரி) 26ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து அந்த நேரத்தில் மற்றொரு மீளாய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இங்கிலாந்திலுள்ள மக்கள் முடிந்தவரை வீடுகளிலிருந்தவண்ணம் வேலை செய்யுமாறும், பொதுப்போக்குவரத்திலும், கட்டிடங்களுக்குள்ளும் மாஸ்க் அணிந்துகொள்ளுமாறும், அபாயகரமான இடங்களுக்கும், முதியோர் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களை சந்திக்கச் செல்வதற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமுடக்கம் குறித்துப் பேசிய பிரதமர், பொதுமுடக்கத்தால் கட்டாயம் இழப்பு ஏற்படும் என்றும், அது மக்களுடைய உடல் மற்றும் மன நலன் மீதும், வர்த்தகம், பணி மற்றும் வாழ்வின் மீதும், குறிப்பாக நமது பிள்ளைகளின் வாழ்வின்மீதும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
ஆகவே, அரசு, நம் நாட்டை மீண்டும் முடக்குவதில் நம்பிக்கை கொள்ளவில்லை என்று கூறிய அவர், அதற்கு பதிலாக, பூஸ்டர் தடுப்பூசியின் பாதுகாப்பு, பிளான் B கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் உதவியுடன் கொரோனா வைரஸ் பரவலைக் குறைப்போம். நமது மருத்துவ அமைப்பை வலிமைப்படுத்தும் வகையில் செயல்படும் அடே நேரத்தில், அத்தியாவசிய தேசிய சேவைகளையும், அன்றாட தேவைக்குரிய பொருட்கள் கிடைப்பதையும் தொடருவோம் என்றார்.
பிரதமர் கூறியுள்ள விடயங்களிலிருந்து, மீண்டும் முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என்பதுடன், பிப்ரவரி வாக்கில் நாடு சகஜ நிலைக்குத் திரும்பலாம் என்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது.