பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அணி திரண்ட அவரது சொந்தக் கட்சியினர்: கேள்விக்குறியான தலைமை
கொரோனா பாஸ் என்னும் தடுப்பூசி பாஸ்போர்ட்களை அறிமுகம் செய்வதற்கெதிராக பிரித்தானிய பிரதமரான போரிஸ் ஜான்சனின் சொந்தக் கட்சியினரே நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக அணி திரள, அவரது தலைமை கேள்விக்குறியாகும் ஒரு நிலைமை உருவானது.
நேற்று செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்றத்தில் பிளான் B திட்டங்களின் கீழ், தடுப்பூசி பாஸ்போர்ட்களை அறிமுகம் செய்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தார்கள்.
பிரதமரின் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து அவரது கட்சியினரான கன்சர்வேட்டிவ் கட்சியினர் சுமார் 100 பேர் வாக்களிக்க, பிறகு லேபர் கட்சி ஆதரவளித்ததால்தான் பிரதமரால் வாக்கெடுப்பில் ஜெயிக்க முடிந்தது.
அவரது பிளான் B கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதில் 99 பேர் போரிஸ் ஜான்சன் சேர்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியினர்!
லேபர் கட்சியினர் ஆதரவளித்ததைத் தொடர்ந்து சில கட்டுப்பாடுகளை போரிஸ் ஜான்சனால் கொண்டுவர முடிந்துள்ளது.
இந்நிலையில், இது போரிஸ் ஜான்சனுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
இதற்கு முன் தெரஸா மே பிரதமராக இருந்தபோது, அவரது பிரெக்சிட் ஒப்பந்தத்தை எதிர்த்து 118 பேர் வாக்களித்து அவரைத் தோற்கடித்தார்கள். அவருக்கு அடுத்து, போரிஸ்தான் தனது கட்சியினரிடையிலேயே இவ்வளவு பெரிய எதிர்ப்பை சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பிரதமர் இல்லத்தில் நடந்ததாக கூறப்படும் பார்ட்டிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் போரிஸ் ஜான்சன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
மக்களையெல்லாம் கட்டுப்பாடுகளைப் பின்பற்றச் சொல்லிவிட்டு பிரதமர் இல்லத்தில் பார்ட்டிகள் நடந்ததாக தகவல்கள் வெளியாக, அதனால் கோபத்திலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க பிரதமர் திட்டமிட, அவருக்கு எதிராகவே வாக்களித்துவிட்டார்கள்.