18 வயதில் ரூ 20,000 கடனாக வாங்கி பல பில்லியன் டொலர் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய நபர்
இந்திய கோடீஸ்வரர்கள் பலர் புதிதாகத் தொடங்கி பின்னர் தங்கள் கடின உழைப்பால் பில்லியன் டொலர் சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளனர்.
மிதிவண்டி பாகங்கள்
அப்படிப்பட்ட ஒருவர், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு கடும் சவாலாக செயல்படும் பாரதி ஏர்டெல்லின் உரிமையாளர் சுனில் மிட்டல்.

இன்று, ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ளது, இதன் சந்தை மதிப்பு ரூ.12.68 லட்சம் கோடி.
இதன் மூலம், பாரதி ஏர்டெல் இந்தியாவின் நான்காவது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது. தொழிலதிபராக சாதிக்க வேண்டும் என்பது மிட்டலுக்கு எளிதானதாக இருக்கவில்லை.
1976 ஆம் ஆண்டு லூதியானாவில் மிதிவண்டி பாகங்கள் தயாரிப்பாளராக பாரதி நிறுவனத்தைத் தொடங்கினார். தனது தொழிலைத் தொடங்க தனது தந்தையிடமிருந்து ரூ.20,000 கடன் வாங்கினார்.
லுதியானாவில் பிறந்த சுனில் மிட்டல் ஒரு அரசியல் பாரம்பரியம் கொண்ட ஒரு குடும்பத்தில் வழக்கமான எதிர்பார்ப்புகளுடன் வளர்ந்தார். அவரது தந்தை சத்பால் மிட்டல் ஒரு அரசியல்வாதி. ஆனால் சுனில் பொறுமையாக அரசியலைவிட்டு வேறு பாதையைத் தெரிவு செய்தார்.
18 வயதில், அவர் தனது தந்தையிடமிருந்து ரூ.20,000 கடன் வாங்கி, ஒரு நண்பருடன் சேர்ந்து ஒரு சிறிய சைக்கிள் பாகங்கள் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினார்.
18 நாடுகளில் பரவி
வெறும் மூன்று ஆண்டுகளில், மிட்டல் மற்றும் அவரது நண்பரின் முயற்சி மற்றும் உழைப்பு இன்னொரு மூன்று யூனிட்டுகளைத் தொடங்க வாய்ப்பாக அமைந்தது. பின்னர் மிட்டல் அனைத்தையும் விற்றுவிட்டு, மின்சார ஜெனரேட்டர்களை இறக்குமதி செய்யும் புதிய தொழிலில் இறங்கினார்.

அந்த முயற்சி 1983 வரை நீடித்தது, அப்போது அரசாங்கம் திடீரென ஜெனரேட்டர் இறக்குமதியைத் தடை செய்தது. 1992 ஆம் ஆண்டு, இந்தியா தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கியபோது, மிட்டல் டெல்லி செல்லுலார் உரிமத்திற்கு விண்ணப்பித்து அதைப் பெற்றார்.
1995 வாக்கில், பாரதி செல்லுலார் லிமிடெட் ஏர்டெல் என்ற பிராண்டின் கீழ் சேவைகளைத் தொடங்கியது. 2008 ஆம் ஆண்டில், ஏர்டெல் உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக மாறியிருந்தது, 18 நாடுகளில் பரவி மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்தது.
இந்த நிலையில் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பேரிடியாக, 2016 ஆம் ஆண்டில், முகேஷ் அம்பானி இலவச அழைப்புகள் மற்றும் குறைந்த கட்டணத்தில் டேட்டாவுடன் ரிலையன்ஸ் ஜியோவை அறிமுகப்படுத்தினார்.
சொத்து மதிப்பு 14.9 பில்லியன்
முகேஷ் அம்பானியின் முடிவு தொலைத்தொடர்பு வட்டத்தையே உலுக்கியது. மிட்டலின் ஏர்டெல் நிறுவனமும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டது. ஆனாலும் மிட்டல் அம்பானியிடம் விட்டுத்தர மறுத்து, தனது திட்டங்களை புதிதாக வகுத்தார்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ஏர்டெல் இன்னும் செயல்பட்டு வருகிறது. 69 வயதான சுனில் மிட்டலின் தற்போதைய சொத்து மதிப்பு 14.9 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே ஃபோர்ப்ஸ் பத்திரிகை பட்டியலிட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்திற்கு தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் 500 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். டெல்லியின் மிகவும் விலையுயர்ந்த பங்களாக்களில் ஒன்றில் சுனில் மிட்டல் தற்போது வசித்து வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |