பிரித்தானியாவில் முதலைக்கூண்டுக்குள் வீசப்பட்ட குழந்தை: புதிய தகவல்கள்
இங்கிலாந்தில், தனியார் உயிரியல் பூங்கா ஒன்றில், நபர் ஒருவர் குழந்தை ஒன்றைத் தூக்கி முதலை இருந்த குழிக்குள் வீசிய சம்பவம் நினைவிருக்கலாம்.
குழந்தையை தூக்கி முதலைக்கூண்டுக்குள் வீசிய நபர்
இங்கிலாந்திலுள்ள Huntingdon என்னுமிடத்தில், ஆன்டி ஜான்சன் என்பவரும் அவரது மனைவியான ட்ரேசி ஜான்சன் என்னும் பெண்ணும் இணைந்து உயிரியல் பூங்கா ஒன்றை நடத்திவருகிறார்கள்.

கடந்த மாதம் 18ஆம் திகதி, நோர்ஃபோக்கைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர், திடீரென ஒரு 3 வயது குழந்தையைத் தூக்கி முதலைகள் இருந்த குழிக்குள் வீசியுள்ளார். அந்த குழிக்குள் 15 முதலைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
மக்கள் பதற, சட்டென உயிரியல் பூங்கா உரிமையாளரின் மனைவியான ட்ரேசி அந்த குழிக்குள் குதித்து குழந்தையைத் தூக்க, உயிரியல் பூங்கா ஊழியர்கள் அவர்கள் இருவரயும் மீட்டுள்ளார்கள்.
அந்தச் சிறுவனுக்கு கையிலும் இடுப்பிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், அவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிர்ஷ்டவசமாக, முதலைகள் குழந்தையை ஒன்றும் செய்யவில்லை என்றும் செய்திகள் அப்போது வெளியாகியிருந்தன.
புதிய தகவல்கள்
இந்நிலையில், அந்தச் சிறுவனை ஒரு முதலை தாக்கியதாகவும், அவன் படுகாயமடைந்ததாகவும், தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அவனுக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவனுடைய நிலைமை சீராக உள்ளதாகவும், என்றாலும், அவன் முழுமையாக குணமடைய நீண்ட காலம் ஆகும் என்றும், அவனுடைய சிகிச்சைக்காக நிதியுதவி கோரும் விண்ணப்பம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் பிள்ளையை காப்பாற்றிய உயிரியல் பூங்கா ஊழியர்களுக்கு அந்தச் சிறுவனின் பெற்றோர் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், தங்கள் பிள்ளை நலம் பெற வாழ்த்தியவர்களுக்கும், மருத்துவமனையில் உதவியர்கள் உட்பட அனைவருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அந்தச் சிறுவனின் குடும்பம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |