கண்ணில் மிளகாய் பொடி தூவி.. நெருப்பால் சூடுபோட்டு கொல்லப்பட்ட சிறுவன்! அம்பலமான கொடூர தாய் உள்ளிட்ட 3 பேரின் நாடகம்... அதிர்ச்சி பின்னணி
இந்தியாவில் மகனை அடித்து கண்ணில் மிளகாய் பொடி தூவி நெருப்பால் சூடு வைத்து கொலை செய்த தாய் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த கொட்டிலேட்டி கிராமத்தில் இருந்து உச்சன்கொல்லைக்கு செல்லும் வழியில், மல்லேஸ்வரன் மலை அடிவாரத்தில் கடந்த பிப்ரவரி 8ம் திகதி, சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தான்.
பொலிசார் தீவிர விசாரணை நடத்தியும் சிறுவனின் அடையாளம் தெரியவில்லை. இதனால், சடலத்தின் போட்டோவை அண்டை மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா போலீசுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிக்கும் தனலட்சுமி, பெங்களூரு பொலிஸ் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 25ம் திகதி, தனது மகள் நதியாவின் மகன் ராகுல் (10) என்பவனை கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணவில்லை என்று புகார் அளித்திருந்தார்.
அவர் அளித்த புகைப்படத்தை பொலிசார் சரிபார்த்த போது, பர்கூரில் கொலையாகி கிடந்த சிறுவன் ராகுல் தான் என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், சிறுவன் ராகுலை அவனது தாய் நதியா, அவரது கள்ளக்காதலன் சுனில்குமார் (30), அவரது மற்றொரு காதலி சிந்து (25) ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பெங்களூரு பொலிசார் கைது செய்தனர். கைதான சுனில்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில், கணவரை பிரிந்து வாழ்ந்த நதியாவிற்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது.
ராகுல் குழந்தையாக இருந்த போது எங்கள் உறவுக்கு பிரச்சினை இல்லாமல் இருந்தது. ஆனால் அவன் வளர வளர எங்களுக்கு இடையூறாக இருந்தான். இதனால் ஏற்பட்ட கோபத்தில் நானும் நதியாவும் சிறுவன் ராகுலை அவ்வப்போது பிரம்பால் அடித்தும் சூடு வைத்தும், கண்ணில் மிளகாய் பொடி தூவியும் சித்திரவதை செய்து வந்தோம்.
கடந்த பிப்ரவரி மாதம் 7ஆம் திகதி வீட்டில் தனியாக இருந்த சிறுவன் ராகுலை நான் அடித்து கொன்றேன். எனது மற்றொரு காதலி சிந்துவுடன் ஒரு காரில் ராகுலின் சடலத்தை எடுத்து தமிழ்நாட்டில் வீசிவிட்டேன் என கூறியுள்ளார்.
இதையெல்லாம் மறைத்து தான் கொடூர பெண்ணான நதியா ஒன்றும் தெரியாதது போல நாடகமாடியிருக்கிறார். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த பொலிசார் பெங்களூரு சிறையில் அடைத்தனர்.
கொலை செய்யப்பட்ட சிறுவன் ராகுலின் உடல் பர்கூரில் கிடந்ததால் வழக்கை பர்கூருக்கு மாற்ற பெங்களூரு பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக பர்கூர் டி.எஸ்.பி. தங்கவேல் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பெங்களூரு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.